புதன், 25 ஜூலை, 2012

புனைவுத்திகள்


வெ. சஞ்சீவராயன்,
தமிழ்த்துறைப் பேராசிரியர்.
ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நல்லம்பள்ளி,  தருமபுரி.

புனைவு என்பது புலவன் கையாளும் இலக்கிய உத்திகளில் ஒன்றாகும். செய்திகளின் வெற்றுத்தொகுப்பு    இலக்கியம்    ஆகாது. கவிஞன்,    தன்காலத்துச் செய்திகளையோ பழைய காலத்துச் செய்திகளையோ கூறும்போது கற்பவரது    மனத்தில்    ஆழப் பதியும் வகையில் சுவைபடச் சொல்லுதல் வேண்டும். அதற்குத் துணைபுரிவதுதான் புனைவு என்னும் உத்தியாகும்.

சங்க அகநூல்களிலும் புறநூல்களிலும் உவமை, உருவகம், தன்மை நவிற்சி, கற்பனை, இயற்கை,  வருணனை,  உள்ளுறை,  இறைச்சி, உருக்காட்சி, அடைமொழி    ஆகிய    புனைவுகள் புலவர்களால்    திறம்படக் கையாளப்பட்டுள்ளன.    அவ்வகையில்,    அகநூல்களில் ஒன்றான குறுந்தொகையில்    இடம்பெறும்    புனைவுத்திகள் குறித்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புனைவு – சொற்பொருள் விளக்கம்

“புனைவு”  என்ற சொல் பழைய தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் வேறுவேறு வடிவங்களில் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.1   புனைவு, புனைதல் ஆகியன முறையே செய்கை, கை செய்தல்,  பண்ணுதல்    என்னும்    பொருள்களைத்    தருகின்றன.    இவையே அன்றி அலங்கரித்தல், எழுதுதல், தீட்டுதல், இயற்றுதல், கற்பித்துக் கூறுதல் ஆகிய பொருள்களும் இதற்கு உள்ளன.
இடத்திற்கேற்றவாறு இஃது அவ்வப் பொருள்களைக் காட்டும்.

பொருள்களை    உணர்த்துவதாய்ப் புனைதல் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
இத்தொழிற்பெயர் பெயரெச்ச வடிவிலும் வினையெச்ச வடிவிலும் இந்நூல்களில் அறியப்படுகிறது.

“செய்யுள் மொழியால் சீர் புனைந்து”2 “புதுவது புனைந்த யாப்பின் மேற்றே”3 “இன்னன புனைந்த நன்னடைத் தாகிக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப”4

“மாசில் பனுவல் புலவர் பாடிய
நாவில் புனைந்த நன்கவிதை மறாமை”5

எனவரும் மேற்கோள்கள் நோக்கத்தக்கன. அறிஞர் கருத்து
ஒருவரால்    புனையப்பட்டுக்    கற்பித்துக் கூறப்படும்    மொழிகள்,    ‘புனைந்துரை’  எனப்படும்.
இவ்வாறு உரைப்பதைக் கட்டுரை என்பர்.6  கற்பிக்கப்படுவதால் இது கற்பனை எனவும் பட்டது.
பழைய    நூல்களில்    இச்சொல்    பிற்காலத்துத்    திருமந்திர    நூலில்    காணப்படுவதாகச்    ச.வே.சுப்பிரமணியன்    குறிப்பிடுகிறார்.7   சங்க    இலக்கியங்களில்    தென்படும்.  புனை,  புனைவு என்னும்
சொற்கள் கற்பனை என்ற பொருளைச் சுட்டுவனவாகக் கொள்ளலாம் என்கிறார் ந. பிச்சமுத்து.8

கற்பனைச் சொல் அருவம், நினைவு, அறிவு, மனோபாவம்,கட்டளை, கற்பித்து மொழிதல்,
இட்டுக்கட்டி    உரைத்தல்,    கவிதையின்    ஊற்று    ஆகிய    பொருள்களைத்    தருவதாகச்    சான்றுகள்
காட்டி விவரிக்கினறார் ச.வே. சுப்பிரமணியன்.9

புனைவு வகைகள்

உள்ளது    புனைதல்,    இல்லது    புனைதல்    எனப்    புனைதல்    இருவகைப்படும்.    உலகில் மெய்யாக நிகழும் நிகழ்வுகளைப் புனைந்து கூறுதல் உள்ளது புனைதலாம். மெய்யாக நிகழும் உள்ளனவற்றிலேயே சிறிது இல்லனவற்றையும்     புனைந்துரைத்தல் இல்லது புனைதலாம்.10 எக்காலத்தும் இல்லாதனவற்றைப் புலவர்கள் கூறமாட்டார். ;ஆதலின், இல்லது புனைதல் என்பது இதனை உணர்த்தாது. இரண்டுமே கற்பித்துச் சொல்லப்படுவனவே. அகப்பாடல்கள் பெரும்பாலன
இல்லது புனைதல் வகையைச் சேர்ந்தவை. நாடக வழக்கு.
இலக்கியத்தில் பெரும்பான்மை மெய்மையும்    (உள்ளது),    சிறுபான்மை கற்பனையும் (இல்லது) விரவி வர வேண்டும் என்பது முன்னோர் கொள்கை. இல்லது கலவாமல் உள்ளதை மட்டுமோ அல்லது உள்ளது    கலவாமல்    இல்லதை மட்டுமோ கூறிச்    செல்வது சிறந்த இலக்கியமாகும். எனவேதான் தொல்காப்பியரும்,

“நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”11

என்றார் (நாடக வழக்கு - இல்லது@ உலகியல் வழக்கு – உள்ளது).

கவிஞன் உலகில் நிகழும் உண்மை நிகழ்வுகளை உற்றுநோக்கித் தான் உணர்ந்தவாறு அவற்றைக்    கூற    நினைத்தாலும்    கேட்பவனது    உள்ளத்தில்    இனிமையும் எளிமையும்    தெளிவும் பிறந்திட அவன் மேற்கொள்ளும் செயற்கையான படைப்பாக்க உத்திதான் புனைவு என்று முடிவு செய்யலாம்.

உவமைப் புனைவு

உவமை – ஒப்பு@ இஃது உவமம் எனவும்படும். இதுவரை அறியப்படாத பொருள் ஒன்றன்இயல்பைத்    தெளிவாக    அறிவிக்க,    முன்பு    நன்கறியப்பட்ட    வேறொரு    பொருளை    அதனோடு ஒப்புமைப்படுத்தி, ‘இது போல்வது அது’ எனச் சுட்டியுணர்த்துவது உவமையாகும். புதுமையான செய்திகளைப் புலவர்கள் கூறும்போது அவை மனத்தில் நன்றாகப் பதிவதற்கு இத்தகு உவமைப் புனைவு    என்னும்    உத்தியைக் கூறாது விட்டால்    அது உள்ளுறை    உவமமாகும்.    வாயின் சிவப்பைப் பவளத்தில் வைத்து உள்ளுறுத்து உரைப்பதுதான் இங்குக் கருத்தாகும்.
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் நுட்பமாக அறியத்தக்க வகையில் பாடல்களில்
இடம்பெற்றுள்ளது. ‘யாயா கியளே’21 எனத் தொடங்கும் பாட்டில்,

“பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்ப+ மென்சினைக் காஞ்சி ய+ரன் கொடுமை”

என்னும் அடிகளில் உள்ளுறை உவமம் காணப்படுகிறது. காஞ்சி மரத்துக்கிளை தன்னை உழவர் ஒடியுமாறு    வளைத்தாலும்    அதனைத்    தாங்கிக்கொண்டு    அவர்கள்மீது    பசிய தாதுக்களை வாரியிறைத்துதச் சிறப்புச் செய்வது போன்று புறவொழுக்கத்தால் தனக்குத் தலைவன் கொடுமை புரிந்தாலும்     அதனைப்பொறுத்து    அவன் வரவிற்கு மகிழ்ந்து    சிறப்புச்    செய்கின்றாள்    தலைவி என்பது உள்ளுறுத்துச் சொல்லப்படும் பொருளாகும்.

இறைச்சிப் புனைவு

இறைச்சி என்பது உள்ளுறை உவமத்தைக் காட்டிலும் நுட்பமான குறிப்புப் பொருளாகும்.
இதுவும்    கருப்பொருளின் அடியாகப்    பிறக்கும்.    எனினும், உவமை உவமேயம்    என்னும் அடிப்படையில்    இது    தோன்றாது. கருப்பொருளை    விரிக்கும்போது அதனினின்றும் கிளைக்கும் நுட்பமான  பொருள்தான் இறைச்சியாகும்.    இவ்விறைச்சியின்    இலக்கணத்தைத்    தொல்காப்பியர் மூன்று நூற்பாக்களில் சுட்டுகிறார்.

இஃது    உரிப்பொருளின்    புறத்தே    தோன்றும்    என்றும்,    இதனுள்    வேறொரு பொருள் பிறக்குமென்றும்22   அவர்    கூறுகிறார்.     மேலும்,        கருப்பொருள்களில் விலங்குகளும்    பறவைகளும் நிகழ்த்தும்    அன்பு    வாழ்க்கையைத்    தோழி        தலைவியை    வற்புறுத்தும்    குறிப்பினில்    இறைச்சிப் பொருளில் அமைத்துக் காட்டுதலும் செய்யுள் மரபு என்பர்.23 இதற்கு,

“நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே”24

எனவரும் குறுந்தொகைப் பாடல் எடுத்துக்காட்டாகும். தன்மை நவிற்சிப் புனைவு ஒரு    செய்தியை மிகைப்படுத்திக் கூறாமல்    அதன்இயல்பை உள்ளதை   உள்ளவாறே கூறுதல் தன்மைநவிற்சியாகும்.    இஃது    இயல்புநவிற்சி    எனவும்படும்.  சங்க இலக்கியத்தின் பெரும்பான்மையான பாடல்கள் இத்தகு நவிற்சியைப் பொருளாக உடையனவாம்.

“ஆம்பற் ப+வின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்”25 என்னும் குறுந்தொகைப்பாட்டுத் தன்மை நவிற்சிபட அமைந்ததைக் காணலாம். கற்பனை புனைவு
ஒரு    சாதாரண செய்தியை    எழில்படவும் சுவையுண்டாகவும்    சொற்களில் அமைத்துச் சொல்லுதல்தான் கற்பனையாகும்.     கற்பித்துச்சொல்லப்படுவதால் கற்பனை எனப்பட்டது. கற்பித்தல் - அழகும் சுவையும்பட எடுத்தியம்புதல். ‘அழகான முகம்’ என்ற எளிய செய்தியை,‘நிலவு முகம்’ எனக் கற்பித்துக் கூறினால் அது கற்பனையின் பாற்படும். இங்கு மாசுமறுவற்ற
முகம் முழுமதியாகக் கற்பித்துக் கூறப்படுகிறது. இலக்கியத்தில் முண்டகம் என்று சுட்டப்படும் முள்ளிச் செடியில் நிறைய முட்கள் இருக்கும். இக்கூரிய முட்களை அணிலின் கூர்மையான பற்களாகக் கற்பனை செய்கிறார் அம்மூவனார் என்னும் புலவர்.


“குறும்பல் சுனை”32 “கொடுவில் எயினர்”33 “வார்ந்ந்ந்த்த்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவை”34
“செங்காற் பல்லி”35 “பெருங்கை வேழம்”36 “கருங்கண் தாக்கலை”37 “துள்ளுநடைச் சேவல்”38 “சிறுகட் பெருங்களிறு”39 “பெருந்தோட் குறுமகள்”40

முடிவுரை

இதுகாறும்    மேற்காட்டிய    சான்றுகளால்    குறுந்தொகையின்    புனைவுத்தி    முறைகள்    புலப்படும்.
இலக்கியத்தின்    செவ்வியல்    தன்மைக்கு    இத்தகு    உத்திகளும்    துணைபுரிகின்றன.
இத்தொகைநூலின் புனைவுத்திமுறை தனித்தன்மை மிக்கதாக அமைதலை இச்சான்றுகள்
வாயிலாக உணரலாம். அடிக்கு;கு;குறிப்பு;பு;புகள்
1.    புனைதல்,    புனைதல்    வல்ல    கம்மியன்,    புனைதார்,    புனைந்த,    புனைந்து,    புனைந்துரை, புனைநர், புனைமாண் நல்லில், புனையவிரிழை, புனையா ஓவியம், புனையிருங் கதுப்பகம், புனைய+உ, புனைவில் நல்லடி, புனைவில் மேனி ஆகியன.
2.    தொல். பொருள். சூத். 537.
3.    மேலது, சூத். 540.
4.    தண்டியாசிரியர், தண்டியலங்காரம், சூத். 8.
5.    பரிபாடல், 6.
6.    கலித்தொகை, 14@ இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2:73-81.
7.    சுப்பிரமணியன், ச.வே., கம்பன் கற்பனை, ப. 22.
8.    பிச்சமுத்து, ந., திறனாய்வும் தமிழிலக்கியக் கொள்கைகளும்,
9.    ப. 84.
10. சுப்பிரமணியன், ச.வே., கம்பன் கற்பனை, பக். 23-26.
11. தொல். பொருள். சூத். 53, நச். உரை.
12. தொல். பொருள். சூத். 53.
13. மேலது, சூத். 279.
14. குறுந்தொகை, 18.
15. தொல். பொருள். சூத். 280. இளம். உரை.
16. மேலது, சூத். 280.
17. குறுந்தொகை, 17.
18. மேலது, 313.
19. தொல். பொருள். சூத். 295.
20. மேலது, சூத். 50.
21. மேலது, சூத். 51.
22. குறுந்தொகை, 10.
23. தொல். பொருள். சூத். 226.
24. மேலது, சூத். 227.
25. குறுந்தொகை, 37.
26. மேலது, 46.
27. மேலது,    49.
28. மேலது,    51.
29. மேலது,    110.

30. மேலது,    47.

ஞாயிறு, 11 மார்ச், 2012

அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்



ம.சந்திரசேகரன்
உதவிப் பேராசிரியர்
 பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி
 தருமபுரி.05.
மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் பிறக்கின்றன. உளவியல் ஆய்வுகளும், கலை,இலக்கிய படைப்பிற்கும் மனம் அடிப்படையாக உள்ளது. எனவே, படைப்பில் வெளிப்படும் உள வெளிப்பாடுகளை அகநானூற்று ஔவையார் பாடல்களில் இக்கட்டுரை ஆராய்கிறது.
அகநானூற்றில் ஔவையார் பாடிய 11, 147, 273, 303 எனும் எண்கள் கொண்ட நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்நான்கு பாடல்களும் பாலை திணைக்குரியதாகவும், தலைவி கூற்று பாடல்களாகவும் பாடப்பட்டுள்ளன.

ஒன்றுதல்
ஒரு சிறந்த நபரை இழந்ததால் அந்த நபரின் தன்மைகள் பண்புகள், குணநலன்கள் ஆகியவற்றை மேற்கொள்ளுவதாகப் பாவித்தல் ஒன்றுதலாகும். புகழ்வாய்ந்த ஒரு நபரோடு அல்லது ஒரு நிறுவனத்தோடு ஒன்றித்து ஒருமை காணுதலும் ஒன்றுதலாம்1
தலைவி தலைவனோடு வாழ்ந்து இன்பம் அடைந்தவள். தலைவனின் பண்பு நலன்களை நன்கு உணர்ந்தவள். எனவே, தலைவன் பிரிவை ஏற்க அவள் மனம் உடன்படவில்லை. மேலும் அவனில்லா இடம் துன்பம் தருவதாகக் கருதுகிறாள். தன் துன்பம் நீங்க தலைவன் சென்ற வழியில் தானும் செல்ல வேண்டும் என எண்ணுதல் ஒன்றுதல் எனும் உளவெளிப்பாட்டைக் காட்டுகின்றது. இதனை>
           அழிநீர் மீன் பெயர்ந் தாங்கு>அவர்
          வழிநடைச் சேறல் வலித்திசின் யானே           303:19-20
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.

மனவெழுச்சி
மனவெழுச்சி என்பது உணர்ச்சிகளின் மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும். நம்மைப்பாதிக்கும் நிகழ்ச்சியிலோ நாம் மிக்க ஆர்வம் கொண்டுள்ள ஒரு சூழ்நிலையிலோ மனவெழுச்சிகள் நம்மிடம் இயல்பாகத் தோன்றுகின்றன2.
மனவெழுச்சி வகைபாட்டை உளவியல் அறிஞர்கள் கூறுவதாக சந்தானம் பின்வருமாறு கூறுகிறார். அவை:
1. ஆதாரமான இலக்கு நோக்கிச்செயற்படும் மனவெழுச்சிகள் (சினம்> மகிழ்ச்சி> அச்சம்> துயரம்).
2. புலனுணர்ச்சிகளால் தூண்டப்படும் மனவெழுச்சிகள் (வலி> அருவருப்பு> உற்சாகம்).
3. தற்கருத்து> தனது அவாநிலை ஆகியவற்றுடன் இணைந்தவை (பெருமிதம்> அவமானம்> குற்ற உணர்வு).
4. பிறரைச் சார்ந்து எழும் மனவெழுச்சிகள் (அன்பு> பொறாமை> பரிதாபம்).
5. ஆச்சரியம்> மரியாதை போன்ற பாராட்டுத் தொடர்பான மனவெழுச்சிகள்3. என்பனவாகும்.
வினை காரணமாகப் பிரிந்த தலைவன் காலம் நீட்டித்தான். பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி தன் நெஞ்சிடம்>
            தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
              . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
              அலர்அரும்பு ஊழ்ப்பவும்> வாரா தோரே       273: 10-17
என மொழிகின்றாள். தலைவன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தலைவி> அவன் பிரிந்த காலத்தில் தனக்கு நேர்ந்த உள்ளுணர்வுகளை இயம்புகின்றாள்.
வெளிப்படையான பண்பு நடத்தைகளை வெளிப்படுத்தி பரவக்கூடிய உளவியல் மாற்றங்களை உள்ளடக்கிய சிக்கலான ஒரு உணர்வு அனுபவமே மனவெழுச்சியாகும்4 எனச் சார்லஸ்.ஜி. மாரிஸ் கூறுகிறார்.
இயற்கையாக வந்த வாடைக் காற்று தனக்கு வேட்கை நோய் எனும் இளைய முளை முலையின் கண் முளைத்து> துன்பம் எனும் தண்டாக வளர்ந்து> ஊர்ப் பெண்கள் பழிச்சொற்கள் எனும் கிளையாகக் கிளைத்து> ஆராக்காதல் என்னும் தளிர்களை ஈன்று> நாணமில் பெரும்மரமாகி> அலராகிய அரும்புகளைத் தோற்றுவித்தது> இச்சூழலிலும் காதலர் வாரார் எனத் தன் துயரத்தைத் தலைவி மொழிகின்றாள். இஃது தலைவியின் மனவெழுச்சி உளவெளிப்பாடாக அமைந்துள்ளது.
நிலைமாற்றம்
உள்ளத்தில்
 அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாக உடல் நோய்கள் ஏற்படுவதுண்டு. உள்ள நோய் உடல் நோயாக (Psychosomatic) மாறுவதை நிலைமாற்றம் என உளவியலார் குறிப்பிடுவர்5.
      செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள்>
               செலவுஅயர்ந் திசினால் யானே; பலபுலந்து
                உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
                தோளும் தொல்கவின் தொலைய> நாளும்
                பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
       மருந்துபிறிது இன்மையின்> இருந்துவினை இலனே!147: 10 - 14
எனக் கூறுகின்றாள். தலைவனின் பிரிவால் உளபாதிப்புக்கு உள்ளானத் தலைவி யாவற்றையும் வெறுத்து> உண்ணாமல் உடல் மெலிவுற்று> தன் அழகு கெட்டதாகக் கூறுகிறாள். மேலும்> தலைவனால் ஏற்பட்ட நோய்க்குத் தலைவனே மருந்து பிறிது இல்லை எனவும் மொழிகின்றாள். எனவே> தலைவனின் பிரிவு தலைவியின் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வுணர்வே நோயாக மாறியது நிலைமாற்றம் ஆகும்.
              பிணிக்கு மருந்து பிறமன் அணிஇழை
             தன்நோய்க்குத் தானே மருந்து.          (குறள். 1102.)
எனும் குறள் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். மேலும்>
              புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்
             நலம்கவர் பசலை நலியவும்> நம்துயர்     273: 4 - 5
என்ற அடிகளும் தலைவியின் நிலைமாற்றத்தைக் குறிக்கின்றன.

நினைவூட்டல்
நாம் கற்றவைகளையோ> அனுபவித்து உணர்ந்தவைகளையோதாம் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ளமுடியும். ஆகையால் அனுபவம் அல்லது கற்றல் நினைவின் முதற்பகுதியாக அமைகிறது. நமக்கு அவை மீண்டும் தேவைப்படும் வரை கற்ற அல்லது அனுபவித்து உணர்ந்தவை மனத்தில் இருத்தி வைக்கப்படும். இவ்வாறு அமையும் நினைவின் பகுதியை மனத்திருத்தல்) எனலாம். இப்படி மனத்தில் இருப்பனவற்றை நாம் நினைவுட்டிக் கொள்கிறோம். இந்நினைவுட்டுதல் மீட்டுக்கொணர்தல் () அல்லது மீட்டு அறிதல் (  என இருவகையாக அமைகிறது6.
தன் கணவனைத் தேடி காணாது துயர் அடைந்த ஆதிமந்தி போல் யானும் வருத்தமுற்று திரிவேனோ (அகம்.45) என வெள்ளிவீதி வருந்தி தன் கணவனைத் தேடிச் சென்றுள்ளாள் (அகம்.147). இந்நிகழ்வை தலைவி மனதில் பதியவைத்துள்ளாள்; தனக்கும் அத்தகைய நிலை வரும் சூழலில் அந்நிகழ்வை நினைக்கின்றாள். பெற்ற அனுபவங்களைத் தேக்கி வைத்து> நனவு நிலைக்குக் கொண்டு வருவதற்காக நாம் பெற்றிருக்கும் ஆற்றலைத்தான் நினைவுபடுத்தல்7 என ரைபர்ன் கூறுகிறார்.
         நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
        வெள்ளி வீதியைப் போல நன்றும்
       செலவுஅயர்ந் திசினால் யானே; பலபுலந்து         147 : 8 - 10
எனக் கூறுவதன் மூலம் தலைவி உள்ளத்துள் தேக்கி வைத்த நிகழ்வு நனவு நிலையில்> யானும் வெள்ளவீதியைப் போல் தலைவனைத் தேடிச் செல்வதற்கு விரும்பினேன் என்று வெளிப்பட்டுள்ளது. தலைவியின் இக்கூற்று நினைவுட்டல் எனும் உளவெளிப்பாடாக அமைகின்றது.

பாலுணர்ச்சி
ப்ராய்ட்> பாலுணர்ச்சியை வாழ்வுணர்ச்சிகளின் முக்கிய அடங்களாகக் காண்கிறார்.8 மனிதனிடத்தில் பாலுணர்ச்சி பால் வெறி  ஆகியவை உள்ளன. மூளையிலிருந்து பாலுறுப்புக்கும் பாலுறுப்பிலிருந்து மூளைக்கும் இருவழி இணைப்பை ஏற்படுத்துவது பாலுணர்ச்சியாகும். மாறாக மூளையிலிருந்து பாலுறுப்புக்கு ஒரு வழி இணைப்பை மட்டும் ஏற்படுத்துவது பால் வெறியாகும்.9  மனிதனின் பெரும்பாலான செயல்களில் பாலுணர்ச்சிப் பங்கு கொள்கிறது என உளவியல் அறிஞர்கள் மொழிகின்றனர்.
தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் தலைவி பெரிதும் வருந்தினாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி> இவள் பிரிவாற்றாமையால் இறந்துபடுவாளோ என எண்ணி வருந்தியவளிடம் தலைவி> தலைவர் பிரியுங்காலத்து என்னையும் உடன் அழைத்து சென்றனர் ஆயின் கச்சினை விரித்துப் பரப்பி வைத்தமை போன்று விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினது நெருங்கிப் புத்த புங்கொத்துகளையுடைய பெரிய கிளைகள் தாழ்ந்துள்ள மணல் மேட்டில் ஒருவரது மெய் மற்றவரது மெய்யுள் புகுந்தாற் போன்ற கைகள் விரும்புகின்ற புணர்ச்சியை யானும் பெறுவேன்> அன்பு தோன்ற அவரும் பெறுவர். ஆனால் அதனைச் செய்தாரிலையே என இயம்புகின்றாள். இதனை>
                 வம்பு வரித்தன்ன பொங்கு மணற்கான் யாற்றுப்
                 படுசினை தாழ்ந்த பயில்இணர் எக்கர்
                 மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
                 அவரும் பெறுகுவர் மன்னே நயவர      11: 8 - 11
எனும் அடிகள் உணர்த்துகின்றன. உள்ளுணர்ச்சிகளில் பாலுணர்ச்சிக்கு உடலைவிட உள்ளம்தான் பிரதானமாகும். இன்பத்தை மையமாகக் கொண்டு பாலுணர்ச்சி செயல்படுவது உள நிறைவுக்காக அன்றி வேறில்லை. இதனால் மனிதனின் பாலின்பம் உடலைச் சார்ந்திராமல் உள்ளத்தைச் சார்ந்து இருக்கிறது10 எனவே> தலைவியின் பாலுணர்ச்சியும் இங்கு உள்ளம் சார்ந்ததாக உள்ளது. உள்ளம் மகிழ்வடைந்தால் அவள் கண்களும் மகிழ்ந்து உறக்கம் கொள்ளும்.
முடிபுகள்
-     ஒன்றுதல்> மனவெழுச்சி> நிலைமாற்றம்> நினைவுட்டல்> பாலுணர்ச்சி எனும் உளவெளிப்பாடுகள் இடம்பெறுகின்றன.
-     தலைவி தோழிக்குக் கூறுவதாக இரணடுபாடல்களும் (11>147)> தன் நெஞ்சுக்குக் கூறியதாக ஒன்றும் (303)> அறிவு மயங்கிச் சொல்லியதாக ஒன்றும் (273)  ஔவையார் பாடியுள்ளார்.
-     அகநிலை> புறநிலை அடிப்படையில் பெண் அடையும் உள்ளுணர்வுகளே பாடல்களில் வெளிப்படுகின்றன.


அடிக்குறிப்புகள்
1. பெ.நா.கமலா, தொல்காப்பியர் முதல் தெரிதா வரை, ப.308.
2. எஸ்.சந்தானம், கல்வியில் மனவியல், ப.159.
3. மேலது. ப.160.
4. எஸ்.ஆரோக்கியசாமி, கற்றலின் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, ப.103
5. பெ.நா.கமலா, தொல்காப்பியர் முதல் தெரிதா வரை, ப.304.
6. எஸ்.சந்தானம், கல்வியின் உளவியல் அடிப்படைகள், ப.282.
7. எஸ்.ஆரோக்கியசாமி, கற்றலின் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, ப.142.
8. தி.கு.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.211.
9. மேலது, ப.212.
10. மேலது, ப.215. 

வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்


வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்
ந.லெட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளார்,
தமிழ்த்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சி  2.

முன்னுரை  
            ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து படைப்புகளில் கிராமிய மருத்துவம் பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            அக்கால மனிதன் கண்டறிந்த மருத்துவ முறைகள் மரபுவழிப்படி இன்றளவும் தமிழக கிராமங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்றும் கிராமங்களில் வீட்டு வைத்தியம், கைவைத்தியம், பாட்டி வைத்தியம் போன்ற மருத்துவ முறைகள் பயன்பாட்டில் இருப்பதைக் காணலாம். தலைமுறை தலைமுறையாக நாம் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொள்ளும் மருத்துவ முறையை நாட்டு மருத்துவம் , (ஸ்டட்மேன், மருத்துவ அகராதி, பக்.42.)   .என விளக்கம் தருகிறது ஸ்டேட்மேன் மருத்துவ அகராதி.

            மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடிகள், காய்கனிகள், மலர்கள், கிழங்குகள் மற்றும் கடையில் கிடைக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தனக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் முறையை நாட்டு மருத்துவம் எனலாம்.

            வைரமுத்து அவர்கள் தம் கவிதையில், மனிதன் உயிர்வாழ சுவாசம் தேவை. நோயில்லா உடலும், ஆரோக்கியமான உள்ளம் ஏற்படுவதற்கு முதன்மையான மருத்துவ செயல்பாடு சுவாச முறையே ஆகும். சுவாசிக்கும் முறையினை வைரமுத்து கீழ்காணும் கவிதை வழியே புலப்படுத்திக் காட்டுகின்றனர்.
                        வாய்வழி சுவாசிக்காதே
                        காற்றை
                        வடிகட்டும் ஏற்பாடு
                        வாயில் இல்லையென்று
                        சொல்லுங்கள்
                        சுவாசிக்கவும்
                        சுத்திரம் உண்டு
                        எத்தனை பாமரர்
                        இஃதறிவார்
                        சுவாசிக்கும் சுத்தக்காற்று
                        நுரையீரலின்
                        தரை தொட வேண்டும்? 
(வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், பக்.94.)

என்று சுவாசம் பற்றி மருத்துவ உண்மையினை எடுத்துரைப்பதோடு சுவாசிக்கும் முறையினையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகின்றார்.

            சமுதாயத்தில் வாழ்கின்ற மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு துன்பம் அடைகின்றனர். நோய் வருவதற்கான வழிமுறைகளை, மனித சமுதாயம் உணர்ந்து நோய்களைத் தடுக்க முன்வரவேண்டும். தனக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மையினை முன்கூட்டியே நாம் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை,
                        ஒரு கால் வீக்கம்
                        உடனே கவனி
                        யானைக்கால் அறிகுறி
                        இருகால் வீக்கம்
                        இப்போதே கவனி
                        சிறுநீரகத்தில்
                        சிக்கல் இருக்கலாம்.
                        வாயில் என்ன
                        ஆறாத புண்ணா?
                        மார்பகப் பரப்பில்
                        கரையாத கட்டியா?
                        ஐம்பது தொட்டதும்
                        பசியே இல்லையா ?
                        சோதிக்கச் சொல்லுங்கள்
                        அறியாத புற்றுநோய்
                        ஆனா, ஆவன்னா எழுதியிருக்கலாம்
                                          (வைரமுத்து, வைரமுத்து கவிதைகள்பக்.102.)
 
என்கிறார். நோயின் தன்மைக்கேற்பத் தடுக்கும் வழியையும், மருத்துவர்கள் மனிதர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என வலியுறுத்துகின்றார்.

            நோய்கள் உருவாக முதற்காரணமாக அமைவது கட்டுப்பாடற்ற உணவு முறையாகும். அளவான உணவு உண்ணும் முறையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது வைரமுத்துவின் அசைக்க முடியாத கருத்தாகும். மருந்தை உணவாக உட்கொள்ளாமல் உணவை மருந்தாக உட்கொள்ளும் முறையினை மானிடச் சமூகம் உணர வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை தம் படைப்பு வழியே பதிவு செய்கின்றனார்.
                        உணவுமுறையை திருத்துங்கள்
                        தட்டில் மிச்சம் வை
                        பசியோடு உட்கார்
                        பசியோடு எழுந்திரு
                        . . . . . . .
                        அவிக்காத காய்களே
                        அமிர்தம் என்று சொல்லுங்கள்
                        பச்சை உணவுக்குப்
                        பாடம் நடத்துங்கள்
                        மருந்தை உணவாக்காதே
                        உணவை மருந்தாக்கு.
  (வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், பக்.112.)

எனும் கவிதை அடிகளில் நாம் உணவையே மருந்தாக அமைத்து உண்ண வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து.

            கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினத்தில் பேயத் தேவரின் மகள், மின்னல் ஆவார். மின்னலின் குழந்தைக்கு திடீரென ஒரு நாள் காய்ச்சல் ஏற்படுகிறது.

            காய்ச்சலைப் போக்குவதற்கு `மஞ்சப்பத்து போட்டும் காய்ச்சல் குறையவில்லை. இந்நிலையில் அக்குழந்தையின் காய்ச்சலைப் போக்க முருகாயி மூலிகை தைலம் தயார்படுத்துவதை இப்புதினத்தில் புலப்படுத்துகின்றார்.
            தேங்கா எண்ணெயில சுடத்தக் காய்ச்சி
            ஒரு தைலம், வெள்ளப்புடு மஞ்சளத் தட்டிப்
போட்டு வேப்பெண்ணை காய்ச்சி ஒரு தைலம்
 (  வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், பக்.97.)
 
என்று குழந்தையின் காய்ச்சலைப் போக்க உதவும் மருத்துவப் பொருளான தேங்காய் எண்ணை, சுடம், வெள்ளைப்புண்டு, மஞ்சள், வேப்ப எண்ணெய் போன்றவை பயன்படுத்துவதை விளக்கிக் காட்டுகிறார். குழந்தைகளின் வயிற்றின் உள்ளே புழு, புச்சிகள் தோன்றக்கூடும். இந்நிலையினால் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவு ஆதாரத்தினை புழுக்கள் உண்டுவிடும். இதனால் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைபட்டு போய்விடும். மேலும் வயிற்றிலுள்ள உணவுப் பொருட்கள் சரியான முறையில் செரிக்காமல் போய்விடும். இப்புழு புச்சிகளை அழிப்பதற்கு கிராமப்புறங்களில் வேப்ப எண்ணெய் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறார். கருவாச்சியின் குழந்தை அழகு சிங்கத்திற்கு வயிற்றுப் புச்சியினை அழிக்க மேற்கொண்ட மருத்துவ முறையினை பின்வருமாறு சுட்டுகின்றனர்,
            பிள்ளைக வயித்துல புழுவுக புச்சிக இருந்தால்
            பசி குடுக்காது. தவிரவும் குடுக்கிற பால் புழு புச்சிக
            குடிச்சுட்டுப் போயிரும். அதுக்குத்தான்
            வேப்பெண்ணெயச் சுடவச்சு எளஞ் சுட்டுல
            புகட்டிவிட்டா பிள்ளைக்கு
(வைரமுத்து, கருவாச்சிக் காவியம், பக்.118.)
என்பதன் மூலம் வயிற்றுப் புச்சியை அழிக்க வேப்ப எண்ணெயை உண்டு வந்தால் புழு, புச்சிகள் அழிந்து உடல் நலமடையும் நிலையினை உணர்த்திக் காட்டுகின்றனர்.

விலங்குகளுக்கு மேற்கொள்ளும் மருத்துவம்

            வேட்டையாடி காடுகளில் திரிந்த மனிதன் விலங்குகளை விவசாயத்திற்கு பயன்படுத்தியமையே மனித நாகரிகத்தின் முதல்படி நிலை எனலாம். காடுகளில் சுற்றித் திரிந்த மருமகளை வேளாண் தொழிலுக்கு உட்படுத்தி வீட்டில் வளர்த்து வந்தனர். பின்பு மாடுகளையும் தங்கள் சக உறவுகளாக எண்ணி வந்தனர். மாடுகளை பராமரித்தல், பாதுகாத்தல் போன்றவைகளை மிக கவனமாகவே கையாண்டு வந்தனர். மாடுகளுக்கும் ஏற்படும் நோயை தமக்கு வந்த நோய் போல் எண்ணி குணப்படுத்தி வந்தனர்.

            மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது விஷப் புச்சிகள் தீண்டுவது இயல்பாகும். அவ்வாறு விஷம் தீண்டிய மாட்டை காப்பதற்கு சில மருத்துவ முறைகளை கிராம மக்கள் அறிந்திருந்தனர். பேயத்தேவர் விஷம் திண்டிய தன் மாட்டினை காக்க பின்பற்றும் மருத்துவ முறையினை கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பின்வருமாறு வைரமுத்து எடுத்துக்காட்டுகின்றனர்.
                        எலே மொக்க! எருக்கெல கொண்டாடா . . .
                        அந்த ஆமணக்குல ஒண்ண ஓடி என்று
                        உத்தரவிட்டவர் குப்பமணித் தழையைப்
                        பறித்துக் கொண்டே வேப்பம்பட்டை தட்ட
                        ஓடினார். எல்லாவற்றையும் ஒன்று கூட்டிக்
கமலைக்கல்லில் தண்ணீர் ஊற்றித் தட்டினார்.
மாடு புரண்டு புரண்டு படுத்தது. தலை ஒரு பக்கமாக இழுக்கத் தொடங்கியது

            (வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், பக்.138.)
என்பதன் வழியே மாடுகளின் உயிரைக் காக்க மேற்கொள்ளும் மருத்துவ முறையைக் காட்டுகிறார். எருக்க இலை, ஆமணக்கு, குப்பைமேனி, வேப்பம்பட்டை, மனித சிறுநீர் போன்றவைகள் விஷங்களை முறிக்கும் தன்மை கொண்ட மருந்து பொருளாக விளங்குவதை எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை

            கிராமப்புற மக்கள் தாங்கள் கையாளும் மருத்துவ முறைகளையும், மருத்துவ குணம் படைத்த மருந்து பொருட்களையும், தங்களையும், தங்களைச் சார்ந்த விலங்கினங்களையும் காப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இயற்கை வழி கிடைக்கும் தாவரங்களையும் தங்கள் வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருளாகக் கொண்டுள்ளனர் என்பதை வைரமுத்து படைப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன.





சனி, 3 மார்ச், 2012



ஆய்வுச் சுற்றத்தை வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

தமிழ் ஆய்வாளர்களை வெளிப்படுத்தவும், அவர்களின் ஆய்வுகளை ஆவணப்படுத்தவும் ஓர் ஆய்விதழ் தேவை என்ற நிலையில் இந்த களம் தொடங்கப்படுகிறது. ஆய்வாளர் தங்களின் மேலான படைப்புகளை எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம். இவற்றைத் தரம் பார்த்து வெளியிடவுள்ளோம்.

மேலும் இவ்வாய்வுக் களத்திற்கு மேலாண் வல்லுநர்களாக அமைய விருப்பமுள்ள பேராசிரியப் பெருமக்களும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்