வல்லுநர் பக்கங்கள்

பாரதியாரும் திரு.வி.க.-வும்


சேதுபதி

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் இலக்கியம் எழுச்சியுறக் காரணமாக எழுந்த இருபெருங்கதிர்கள் மகாகவி பாரதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.-வும்.
ஒப்புநோக்கத்தக்க உயரிய பண்புகள் இவ்விருவருக்கும் உண்டு. எனினும் கவிதையைப் போலவே, கம்பீரமாக வாழ்ந்து வெகுவிரைவில் தம் பணியை முடித்து விடைபெற்றுக் கொண்டவர் பாரதி (11.12.1882 – -11.09.1921).
உரைநடையைப் போலவே, நீள இருந்து வளர்ந்து வாழ்ந்து நிறைவு பெற்றவர் திரு.வி.க (26.08.1883  -17.09.1953). ஏறத்தாழ ஒரே காலக் கட்டத்தில் உதயமாகிய இவ்விரு இலக்கியக் கதிர்களும் சந்தித்துக் கொண்ட பதிவுகள் கவனத்திற்குரியவை.
பள்ளியாசிரியர்களாகப் பணி தொடங்கிப் பத்திரிகை ஆசிரியர்களாகி, தேசபக்தர்களாகவும், தேசத் தொண்டர்களாகவும், தேச விடுதலைக்குப் பேராடும் ஆயுதமாக எழுத்தைக் கொண்ட இலக்கியவாதியராகவும், சொற்பொழிவாளர்களாகவும் இவ்விருவரும் திகழ்ந்திருக்கின்றனர்.
வாழ்க்கைப் போராட்டத்தில் நிலைகொள்ள வேண்டிப் பொருள் தேட வேண்டிய கட்டாயம் ஒருபுறம், தன்மானம் இழவாது, தாயகம் காக்க வேண்டிச் சமர்புரியவேண்டிய கடமை மறுபுறம். இணைகோடுகளாகச் செல்ல வேண்டிய இவ்விருபுறங்களும் ஒன்றுக்கொன்று பொருதிக் கொள்ளும்போது எதை விடுவது என்ற நிலை வருகிறது. அந்த நேரத்தில் முன்னதை விடுத்து, பின்னதை ஏற்று, வரலாற்றில் முன்நிற்பவர்களாக இவ்விருவரும் திகழ்ந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் முன்னர்ப் பிறந்த பாரதி, திரு.வி.க-வுக்கு முன்னோடியாகவும், சக பயணியாகவும் விளங்கியிருக்கிறார் என்பது திரு.வி.க.-வின் வாழ்க்கைக் குறிப்புகளிடையே துலக்கமாகிறது.
திரு.வி.க. ஸ்பென்ஸர் நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம். வங்கப் பிரிவினையால் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். திலகர் தலைமையில் தீவிரமாக அரசியல் பணிபுரிந்த அரவிந்தரின் வந்தே மாதரம் வங்கப் பத்திரிகையும், தமிழகத்தில் பாரதி பங்காற்றிய இந்தியா பத்திரிகையும் திரு. வி.க.-வை ஈர்த்துத் தேச பக்தியில் திளைக்கச் செய்தன.
அதிலும், பாரதி முதலானோரின் முயற்சியால் சென்னைக்கு வரவழைக்கப் பெற்ற விபின்சந்திரபாலரின் கடற்கரை முழக்கம் திரு.வி.க.-வுக்குள் கனன்று கொண்டிருந்த விடுதலை வேட்கையைத் தூண்டி எரியவிட்டது. பின்னர் நிகழ்ந்ததைத் திரு.வி.க.வே பின்வருமாறு குறிக்கிறார்: பந்தேமாதரப் பத்திரிகையும், பாலர் பேச்சும், திலகர் சிறையும், இன்னபிறவும் எனக்கு அரசியல் பித்தை உண்டாக்கின. ஸ்பென்ஸர் வேலையை விடச் செய்தன. (திரு.வி.க. வாழ்க்கைக்குறிப்புகள், ப.196)
பின்னர் தேசபக்தன் இதழுக்கு ஆசிரியப் பணியேற்ற திரு.வி.க., புதுவையைப் புகலிடமாகக் கொண்ட பாரதி, வ.வே.சு.ஐயர் ஆகியோரின் விடுதலை குறித்துத் தொடர்ந்து அவ்விதழில் எழுதியிருக்கிறார். இவ் இருவரும் பிரிட்டிஷ் எல்லையில் உலவும் உரிமையுடையவராயிருத்தல் வேண்டும் என்ற கிளர்ச்சியைத் தேசபக்தன் தொடங்கினான். கிளர்ச்சி வெற்றியடைந்தது. புதுவையினின்றும் வ.வே.சு.ஐயரும், பாரதியாரும் (1920 பிப்ரவரியில்) வெளிவந்தனர். வ.வே.சு.ஐயர் எனக்கொரு கடிதம் எழுதினார்…. சுப்பிரமணிய பாரதியாருக்குச் சில தடைகள் கூ(க)டலூரில் கிடத்தப்பட்டன என்று ஓர் அரசியல் கிள்ளை தேசபக்தனுக்கு அறிவித்தது. தேசபக்தன் பாசுபதம் எழுந்தது. தடைகள் உருவெளியாயின. கவிஞர் சென்னை சேர்ந்தனர். யான் பாரதியாரை டிராம் தொழிலாளர் சங்கத்தில் கண்டேன். பாரதியார் நாவினின்றும் சக்திப்பாட்டு வீறிட்டது என்று திரு.வி.க. எழுதுகிறார். இவ்வாறு, பாரதியின் விடுதலைக்குத் தம் பத்திரிகை வாயிலாகப் பங்களித்திருக்கிறார் திரு.வி.க.
பின்னர், திலகருக்குப் பின்னர் தேசவிடுதலைப் போராட்டத்தை மேலெடுத்துச் சென்ற காந்தியடிகளின் பணியில் திரு.வி.க. தலைநின்ற போதும் பாரதி – திரு.வி.க. சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
1919 ஏப்ரல் ஆறாம் நாள், காந்தியடிகள் காட்டிய வழியில் தெய்வபக்தியோடு கூடிய தேசபக்திப் பஜனை நடைபெற்றது. முன் ஏற்பாட்டின்படி, காலையில் இராயப்பேட்டையிலுள்ள பஜனைக் கோஷ்டிகளும், மற்றவர்களும் தேசபக்தன் நிலையம் போந்தார்கள். அவர்களுடன் சுப்பராயகாமத்தும், யானும் ஊர்வலம் வந்தோம்; பிற்பகல் ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜன சபையின், குகானந்த நிலையத்தை அடைந்தோம். சுப்பிரமணிய பாரதியார் பஜனைக் கோஷ்டியில் எங்கேயோ எப்படியோ கலந்து வந்தார்.
அவரைக் கண்டதும் செவி அவரது பாடலை விரும்பியது. பாரதியாரைப் பாடுமாறு கேட்டேன். தமிழ்ப் பெருமான், முருகா, முருகா என்று பாடத் தொடங்கினார். பாட்டு-  தமிழ்ப்பாட்டு-  தேனினும் இனிய முருகன் பாட்டு – படத்திலுள்ள ஓவிய முருகனை நகரச் செய்தது. ஓவிய உருவம் வீறுடன் வெளிவருவது போன்ற தோற்றம் உண்டாயிற்று. அன்பர்கள் மெய்கள் அரும்பின; விதிர்விதித்தன; சிலர் மயங்கினர்; சிலர் விழுந்தனர்; சிலர் கண்ணீர் உகுத்துத் தம்மை மறந்தனர்; எல்லாரும் ஆனந்தப் பரவசராயினர்; பாரதியார் சித்திரப் பதுமையானார். பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான், கண்ணாரக் கண்டேன். சிறிதுநேரங் கழித்துப் பாரதியார் விடைபெற்றுச் சென்றார் என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் குறிப்பிடும் திரு.வி.க., பாரதியைத் தமிழ்ப் பெருமான் என்று பெயர்சூட்டி மகிழ்கிறார். இவ்வாறு திரு.வி.க.வால் பாராட்டப் பெற்ற பாரதி, திரு.வி.க.&வைப் பாராட்டிய வரலாறும் உண்டு. அதனைப் பாரதிதாசன் மூன்று கவிதைகளில் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார்.
1918 ஆண்டுவாக்கில், பாரதி, வ.வே.சு.ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் உள்ளிட்ட புரட்சியாளர்கள் புதுவையில் தங்கியிருந்தபோது, திரு.வி.க.வின் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றிருக்கிறது. புதுவை சமரச சன்மார்க்க சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் சிலப்பதிகாரக் கவிநயம் குறித்துத் திரு.வி.க. உரை நிகழ்த்தியிருக்கிறார்.
“………தூய
மதுவையள்ளி மலர்தேக்கி வண்டுகட்கு
விருந்தாக்கி மயக்கு தல்போல்
பொதுவினர்க்குச் சிலப்பதிகா ரச்சுவையை
நடையழகைப் புகலும் போதில்
இதுவையா பேச்சென்பேன்; பாரதியார்
கைகொட்டி எழுவார், வீழ்வார்”
(திரு.வி.க. மணிமடல், 1943)
என்று தம் கவிதையில் பதிவுசெய்கிறார் பாரதிதாசன். இன்னொரு கவிதையில், அவ்வுரையைச் செவிமடுத்த பாரதியின் உணர்வுகளைப் பின்வருமாறு படம்பிடித்துக் காட்டுகிறார்.
“சமரசசன் மார்க்கசங்கக் கட்டி டத்தில்
தகுதிருவீ கலியாண சுந்த ரர்தம்
அமைவுடைய இளங்கோவின் கவிந யத்தை
அமுதம்போல் எடுத்துரைத்தார் பிரசங் கத்தில்
தமைமீறிப் பொங்கியெழும் சந்தோ ஷத்தால்
தடதடெனக் கரகோஷம் செய்தார் ஐயர்
நமதுதமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க
நானிலமே என்றனதம் விழியும் மார்பும்”
என்பது அப்பாடல். இவ்விரு பாடல்களைத் தவிர இன்னொரு பாடலிலும் திரு.வி.க.-  பாரதி இணைப்புச் சித்திரத்தைச் சிறப்புறத் தீட்டியிருக்கிறார்.
புதுவை பாலையசாமி மடத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரச் சொற்பொழிவு நிகழ்வு. பாரதி, பாரதிதாசனோடு, ஸ்ரீநிவாசாச்சாரியார், வ.வே.சு.ஐயர் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த சபை. சிலப்பதிகாரச் செய்யுளைப் பதம்பிரித்துச் சுளைசுளையாகச் செவியினில் சுவைபட ஊட்டிக் கொண்டிருந்த திரு.வி.க. இடையில் ஒரு சீர்திருத்தச் செய்தியையும் குறித்திருக்கிறார்.
இந்து- சைவ மரபில் நின்றொழுகிய அவர் இசுலாமிய அன்பரின் இல்லத்தில் சென்று விருந்து உண்ட அனுபவத்தைக் கூறி, மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று விளக்கியிருக்கிறார். இதனைக் கேட்ட பாரதி, கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை. செந்தமிழ் உணர்வும், சீர்திருத்தமும் இந்தநாட்டு முன்னேற்றத்திற்கு உயிர் எனக் கருதிய அவர், திரு.வி.க.-வுக்கு இணை, இந்நாட்டில் வேறு எவரும் இலர் என்று ஊர் அதிர்ந்திட உரைத்தார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன். முந்தைய பாட்டில், பாரதியை, ஐயர் என்று சுட்டிய அவர், இப்பாட்டில், திரு.வி.கலியாண சுந்தரனாரை, மணவழகனார் என்று தமிழ்ப் பெயரிட்டுக் காட்டுகிறார்.
புதுவையில் இருந்து வெளியேறிய பின்னர், பாரதி, பொட்லபுதூர்ப் பள்ளிவாசலில் இசுலாம் மார்க்கத்தின் மகிமை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தியமையும், சென்னையில் இசுலாமியர் தேனீரகத்தில் பாரதி பலரும் அறிய அமர்ந்து தேனீர் பருகியமையும் இந்நிகழ்வோடு ஒப்பிட்டறிய வேண்டியவை.
எழுத்துக்கும் பேச்சுக்கும் முன்னெடுத்துக்கொண்ட கொள்கைகளை, இயல்பாகவே வாழ்வில் கடைபிடித் தொழுகிய முன்னோடிகளாக, காலத்தை முற்போக்குத்திசையில் முன்னெழுப்பிச் சென்ற வரலாற்று நாயகர்களாகத் திரு.வி.க.வும், பாரதியும் திகழ்ந்தனர் என்பதை இன்று நினைவுகூர்வது பொருத்தப் பாடுடையது.
இந்து & முஸ்லீம் இணக்கத்தோடு, செந்தமிழ் உணர்வும் நமக்கு வாய்க்க இவர்களின் வரலாறு இனிதே துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
சிற்பியின் கவிதைகளில் பெண்
இரா.மீனாட்சி, 
நிர்வாக இயக்குநர், 
தமிழ்மரபுமையம், 
ஆரோவில்- 605101, 
தமிழ்நாடு

கட்டுரைக்கு ஒரு முன் ஏர்

2012ல் சிற்பி கவிதைகளில் பெண் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதும் எனது நிலைபற்றி முதலில் எடுத்துரைக்க வேண்டியது இன்றியமையாதது என்று எண்ணுகிறேன்.

1, கவிஞர் சிற்பிக்குப் பின் எழுதத்தொடங்கி சமகாலக்கவியாக சென்ற நூற்றாண்டில் (1960ல்) இருந்து தொடங்கி இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளின் ஓட்டத்திலும் கவிதைகளைப் படைத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

2, அமரர் சி.சு செல்லப்பா நடத்திய இலக்கிய இதழ் ‘எழுத்து’வினால் முன்னெடுத்துச்செல்லப்பட்ட புதுக்கவிதை இயக்கத்தின் பக்கங்களில் முதல் பெண் வார்த்தைகளாக எனது பாக்கள் அடியெடுத்து வைத்த வரலாறு தமிழ் இலக்கியத்துறையில் பதிவாகியுள்ளது.

3, கவிஞர் சிற்பியுடன் கவியரங்குகளிலும், இலக்கிய ஆய்வரங்குகளிலும் தொடர்ந்து பங்குபெற்று வருவதால், அவருடைய கவியுள்ளத்தை மதிப்பீடு செய்யும் தகுதியை அது எனக்கு அளிக்கிறது. 

4. கவிஞர் சிற்பியின் பெயரால் நிறுவப்பெற்றுள்ள அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விருதினை எனக்களித்து, கவிதை வளர்ச்சியைப்பாராட்டி, நல்ல விமர்சனமும் வைத்துள்ளதால், சிற்பி எனது கவிதைப்பாதையில் சகோதரத்துவம் மிக்கதொரு வழிகாட்டியாக விளங்குகிறார். 

5. சென்னை மித்ரா வெளியிட்டுள்ள எனது வாசனைப்புல் கவிதை நூலுக்கு, பாடிப்பறக்கும் பாரதி மகள் என்ற தலைப்பில் வளமான முன்னுரை அளித்திருக்கிறார். அந்தப்பாராட்டுரை எனக்கும் ஏனைய கவிப்பெண்களுக்கும் உற்சாக ஊற்றாகும். 

6. இந்தக்கட்டுரை, பதிவாகும் நடப்பாண்டில் இந்திய சாகித்திய அகாதெமி ஆலோசனைகுழுவின் அமைப்பாளராக இயங்கும் கவிஞர் சிற்பியுடன் இணைந்து பணியாற்றும் ஏனைய ஒன்பது செயல் உறுப்பினர்களுள் எனக்கும் ஓரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்படைப்பாளிகளின் ஏகப்பிரதிநிதியாகச் சிறப்புநிலை கிடைத்துள்ளது. அதுவும் கவிதாயினிகளின் சார்பாளராக இந்தச்சிறப்பிடம் பெற்றிருப்பதும் குறிக்கப்பட வேண்டிய ஒன்று.

7,  கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி வரலாற்றில் 1950முதல் 2010 வரையான இந்தியத் தமிழ்க்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று ஓர் அறுபதாண்டுத் தமிழ்க்கவிதைகளைத் தொகுக்கும் பணியினை நிறைவேற்றியிருக்கிறேன். ஏறத்தாழ முப்பத்தைந்துப் பெண்கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன என்பது கவிதாமண்டலத்தில் பெருமைக்குரிய செய்தி என்பதோடு இப்பணியானது சிற்பியின் பவளவிழா ஆண்டிலேயே நிறைவேறியுள்ளது என்பதும் அறிந்து இன்புறத்தக்கதல்லவா?

மேற்கூறிய முன்னுரைக் குறிப்புகள் சிற்பியின் கவிதைகளில் பெண் என்னும் தலைப்பிற்குள் ஆர்வமுடன் நம்மை அழைத்துச்செல்லும் வாயிற்படிகளாக அமைந்துள்ளன. 
ஆய்விற்கு எடுத்துகொள்ளப்பட்ட தலைப்புகள் நான்கு பொருண்மைகள் மீது கருத்துகளைக் கட்டமைத்துத் தரச்சொல்லுகிறது. 

முதலாவது தூண் - கவிதைகள்
இரண்டாவது தூண் - கவிஞர் சிற்பி
மூன்றாவது தூண் - சிற்பியின் கவிதைகளில் பெண்
நான்காவது தூண் - இவற்றைத் தொகுத்தளித்து எழுதும் இக்கட்டுரையாளரின் வாசிப்பு அனுபவம்.

இந்நான்கு அம்சங்களைக் கொண்டுள்ள இச்சிறப்புத் தலைப்பு, காலப்பிரமாணத்தில் ஒன்றோடொன்று இசைவான இயல்புகளுடன் தத்தமது தனித்துவக் கூறுகளுடன் விளங்குவதால் இவ்வாவணம் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான பதிவாக விளங்கக்கூடும். 

கவிதை

கவிதை, மொழியின் உன்னதம். அதைப்பற்றி விரிவாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆன் பிராண்டி கூறுகிறார்-  
“வார்த்தைகளுடன் வரும் அனைவரையும் கண்டு களைப்படைகிறேன். வார்த்தைகள் - மொழி இல்லை. பனிபோர்த்திய தீவிற்குச்செல்கிறேன். - பண்படுத்தப்படாதது வார்த்தைகள் அற்றது; எல்லாப்புறமும் எழுதப்படாத பக்கங்கள் விரிந்துள்ளன. மான் சென்ற தடத்தைப் பனியில் காண்கிறேன். மொழி அது வார்த்தைகள் இல்லை....”.
“....கவிதை என்பது ஒரு அகவித்தை அல்லது ஒரு கலை என்றே கருதுகின்றனர். இவர்கள் அறிவும் பிரக்ஞையும் உடைய விமர்சகர்கள். ஒரு சாதாரண, தத்துவம் ஏதும் கற்பிக்கப்படாத மனதுடன் கவிதையை அணுகுபவர். இவர்களுக்குக் கவிதை என்பது அழகியல் சுகம். அறிவிற்கும் செவிப்புலனுக்கும் கிட்டுகின்ற ஓர் உயர்வு நல்கும் பொழுதுபோக்கு. கவிதை என்பது இத்துடன் முடிந்து போகிறதென்றால் நாம் கவிதைக்குள் அதன் ஆன்மாவை உள்ளுறைக் குறிக்கோளை, அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த விதியைப் பற்றியெல்லாம் எண்ண வேண்டியதில்லை. அழகு இனிமை, இசையுடன் கூடிய எழிலார்ந்த எண்ணம் நமக்குப்போதும் என்றாகி விடும்’ என்று கூறியுள்ள ஸ்ரீஅரவிந்தரின் கருத்து ‘’கவிதை தன் பரிமாணத்தில் இதைவிட உயர்ந்த தளங்களை எட்ட வேண்டி ஆன்மனின் தீண்டுகைக்கு ஆவலுற வேண்டும் என்பதாகும்.” (அக்டோபர் - டிசம்பர் 2010 நித்யபாரதி) 
வருங்கால நோக்கில் சிற்பியின் கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறிப்பாகச்சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கம். 

ஓர் அழகான உன்னதமான கலையைப் பயில்வதன்மூலம் மனித உணர்ச்சிகளையும் அவ்வாறே செப்பனிடலாம். கவிதையின் அத்தியாவசியமான பணி என்பது அரிஸ்டாட்டில் குறிப்பிட்ட சித்த சுத்தி எனப்படும் இதய சுத்தி... தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் கீழியல்பான உணர்ச்சிகளின் பாதிப்பில் வாழ்க்கை, களங்கம் அடைந்து விடாமல் பாதுகாக்கக்கூடிய, பற்றற்ற, விருப்பு வெறுப்பற்ற இரசானுபவத்தின் வாயிலாக அத்தகைய அந்தரங்க சுத்திக்கு கவிதை வழிவகுக்கிறது... சித்திரமும் சிற்பக்கலையும் வெவ்வேறு கலைகளின் ஊடே ஒரே இலக்கைநோக்கியே செயல்படுகின்றன. கவிதையின் வழிமுறையையே கலைகள் சிலசமயம் பின்பற்றினாலும் கவிதையின் உயிர்ப்பு, கலையில் இல்லை என்பதால் அதே அளவு திறனுடன் சிலசமயம் கலை செயல்படுவதில்லை என்ற ஸ்ரீஅரவிந்தரின் கருத்து, அவரது வருங்காலக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது. 

கலை என்பது ஒருகுறிப்பிட்ட காலத்தையும், ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பற்றி நிற்பது. காலம் இடம் போன்ற ஏதுமற்ற கவிதையைப்போல சுதந்திரமாக இயங்க முடியாது. ஆனால் அசைவற்ற தன்மையே கலைக்கு ஒரு தனி மதிப்பைத் தந்துவிடுகிறது. கவிதையானது உணர்ச்சியைத்தட்டி எழுப்பி அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட அனுபவத்தையும் கொடுக்கிறது. கலை மனித உணர்ச்சிகளை அடங்கச்செய்து அந்தக்கட்டுக்கோப்பில் கிடைக்கும் நிறைவை அனுபவிக்கச்செய்கிறது. கவித்திறனைவிட கலைத்திறனை அதிகம் பெற்றிருந்த கிரேக்கர்கள் தாம் படைத்தக் கவிதைகளில் அத்தகைய கலை அனுபவத்தைத்தான் கொண்டு வரமுயற்சி செய்தார்கள். இசையோ மனித உணர்ச்சிகளை ஆழப்படுத்தி அவற்றுள்ளே ஒரு ஒத்திசைவைக்கொண்டு வருகிறது என்கின்ற கருத்தும் அந்நூலில் இடம்பெற்றுள்ளது.     
உலகம் நன்கறிந்த சிலி நாட்டுப் பெருங்கவி, பாப்லோ நெரூடா, கவிதை குறித்துச் சொல்வதாவது:

“அந்த வயதில்தான் ..... கவிதை வந்தது 
என்னைத்தேடி....
நானறியேன் நானறியேன் எங்கிருந்தேனென்று....
அது பனிக்காலத்தினின்றா.... நதியினின்றா....
இல்லை இல்லை குரல்கள் இல்லை அவை..
வார்த்தைகள் இல்லை நிசப்தமும் இல்லை
ஒரு தெருவினில் கொடுந்துப்பாக்கி வேட்டுகளுக்கு இடையில்...
அல்லது தனியாகத் திரும்பி வரும்பொழுது...
திடுமென மற்றவர்களிடத்திலிருந்து தனியாய்...
இரவு ஜாமங்களால் ...
ஆணையிட்டு அழைக்கப்பட்டேன்... நான்
அங்கு நான் முகமின்றி இருந்தேன்...
அது என்னைத்தொட்டது....
......  ..................  .................. ..............
என் ஆன்மா வெம்மையுற்றது.... அல்லது
அதற்கு மறந்துபோன சிறகுகள் பொருத்தப்பட்டன... 
அனல் பொறியில் பொருள்நாடி...
என்வழியைத்தேடி..
என் முதல் பிரதியை எழுதினேன்....
(பாப்லோ நெரூடா, சிலி நாட்டுக்கவி 1904 - 1973)

கவிஞர் சிற்பி

பாவேந்தர் பாரதிதாசனைப்போல பாரதியாரைத் தம் குருவாக வரித்துக்கொண்ட பாரதியுகக்கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பாப்லோ நெரூடாவைப்போல, தம் கவிதை எழுத்து அனுபவத்தைப் பின்வரும் வரிகளில் அவர் எடுத்துரைக்கக் காணலாம்.

ஏடு எடுத்து முதல் கவிதை 
எழுதத் தொடங்கிய நான்
கேடுகெட்ட தமிழன் என்முன்
கேள்விக்குறியாகக்
கூடுகட்டி என்னுள்ளத்தில்
தாபம் குடியேறப் 
பாடி அழுதேன்.

‘அது என் முதல் கவிதை’ என்கிறார் சிற்பி. எனவேதான் இவர் உள்ளம் அறிந்து போற்றிய பாவேந்தர் தந்த பாட்டுப்பட்டயம் சொல்கிறது:

‘வீட்டில் குறட்டை விட்ட செந்தமிழர் கண்விழித்த
வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல் 
பாட்டைத்திறக்க வந்த பாலசுப்பிரமணியம் பைந்தமிழ்ப் பாவலர்’

சிற்பி ஒரு தமிழ்ப்பேராசிரியருமாவார். மரபு, புதுமை இரண்டுவகையிலும் தமது கவிதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். தனிக்கவிதை, கதைக்கவிதை, கவிதை நாடகம், காவியம், இசைப்பாடல் மற்றும் சிறுவர் பாடல்கள் எனத் தமிழ்க்விதையின் பலவகை வடிவங்களிலும் தமது ஆற்றலைச் செதுக்கி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சிற்பியின் பவளவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதுபோது அவர்தம் படைப்புகளைப் பற்றி நிறையப் பாராட்டும். அவரது இலக்கியப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தும் பலராலும் பதிவு செய்யப்பட்டன. 
கவிஞர் சிற்பியின் பவளவிழா வெளியீடுகள் நூல்கள், ஆவணப்படங்கள் எல்லாம் அவரது கவிதை வாழ்வினை விரிவாக எடுத்துரைக்கின்றன. 

பெண்கள் 

நாம் இன்னும் மனிதகுல நாகரிகத்தின் உயர்வை முழுமையாக அடையாத நிலையில் இருப்பதால்தான் பெண் இனத்தைத் தனிமைப்படுத்திவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். சிற்பியின் கவிதைகளில் மனிதர்கள் என்று ஆய்வு செய்வதைவிட, சிற்பியின் கவிதைகளில் பெண்கள் என்று மதிப்பீடு செய்ய வேண்டிய வாழ்வில் உயர்வுறாத ஒருகாலத்திலேயேதான் நமது மணிக்கூண்டுகள் நின்று போயிருக்கின்றன. மகளிர்க்குச் சலுகைகள் வழங்கிக்கொண்டாடிக்கொள்வது போன்றதொரு சமூக அறிவின் மயக்க தளத்தில் அறிவு ஜீவித நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறோம்.

பெண்கள் இரண்டாந்தர நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளதோடு சமூகப்பொருளாதார சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதால் இன்னமும் அவர்களுக்குரிய விடுதலை கிடைக்கவில்லை. உடல் உயிர்த்தேவைகளோடு அவர்களுக்கு ஆன்மிகத் தேவையும் இன்றியமையாததாக இருக்கிறது. பெண் வெறும் ஜடப்பொருளல்ல என்பதை உணர, மனித நாகரிகம் காலூன்றிய இத்தனைப் பல்லாயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் பேசுபொருளாக உள்ளது. பெண்விடுதலை பெண் முன்னேற்றம் எனும் சொற்கள் இரண்டு நூற்றாண்டுகளாக உலகமொழிகளில் பதிவு பெற்றுள்ளன. ஆனால், தமிழ்மொழியில், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று திருக்குறள் ஒரு பொதுஉயிர்விதியை வகுக்கிறது. பெண்ணின் நிலையைத்தெளிவுபடுத்த வந்த திருக்குறள்,

தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்று இலக்கணம் வகுத்துத் தருகிறது. இன்னும் ஒருபடி மேலே போய்,

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் 
திண்மை யுண்டாகப் பெறின் 

என்ற குறளில், பெண்ணின் மாண்பினை எடுத்துரைக்கிறது. அந்தத் திண்மை, அவளது நெஞ்சுரத்தைப் பற்றியது. பாதுகாப்பற்ற சமுதாயத்தில் பெண், தன்னை நிலைப்படுத்திக்கொள்ளப் போராளியாகவும் வாழ வேண்டியுள்ள சூழலைத்தான் மேற்சுட்டிய இருகுறட்பாக்களும் உணர்த்துகின்றன.
குற்றம் நிரம்பி வழியும் சமூகத்தில் பெண் கற்புடன் வாழ்தல் எப்படி?
பெண்ணின் தொடக்கம்
பெண் ஆதித்தாய், மூதாய். பாலூட்டி என்பதால் மனிதத்தாய். அன்னையவள் ஆதிமூலம் ஆகிறாள். இறைவியான பின்னும் அமுதூட்டும் சக்தியாகிறாள். பெண், தமிழில் பால்சுரப்பி என்பதால் பால் இலக்கணமே அவளில் ஆரம்பிக்கிறது. இல்லாதது ஆண்பால், பிறர்பால் ஆகிறது. பாலூட்டி என்பதாலேயே தாய் அன்னை மகாசக்தியாகிறாள். இறைவியான பின்னும் பொற்கிண்ணத்தில் ஞானப்பால் அமுதூட்டியாகிறாள். அவள் இல்லத்தில் இருந்து நெருப்பைக்காத்ததனால், அவளே அக்னியின் குறியீடானாள். என்ன கொடுமை? எரிக்கப்படும் விறகுக்கட்டையும் இன்று அவளேதான். 

பெண்ணை, யார் யார் எப்படிப் பார்க்கிறார்கள்?

எதிர் நிற்கும் பெண் காமரூபிணி; அழகு சொரூபம்; பெண் அமுதக் கலசமேந்தி கண்ணெல்லாம் கருணை பொழிய நிற்கும் அமுத சுரபி; காமதேனு; சிந்தாமணி; கற்பகத்தரு என்று தெய்விகமாக ஒருபாலர்க்குத் தெரிகிறாள். வேறுஒருவருக்குப் பெண் மோகினி, மாயப்பிசாசு, கண்ணில் விழுந்து விடும் இரும்புத்தூசு, மாயை, மாயாவி, பூதம், பூதகி. இப்படியெல்லாம் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்துள்ள கவிஞர் சிற்பியின் பார்வை என்னவாய் இருக்கிறது?

‘வேதம் படிக்கப்படிக்க எனக்கு ஆயாசம் ஆகிவிட்டது.
இதுஎன்ன படைப்பிலும் அவன்தான் முதலோ?
அவள் இரண்டாம் பட்சமோ?

........
சட்டென்று கண்டுகொண்டேன். 
எல்லாவற்றையும் கற்ற ஆதிமுதலான நீர்
தேவன் இல்லை, 
தேவி என்று. 
(சிற்பி, தேவதேவி 2003)  

என்று, ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதாகச் சொல்லும் வேதக்கருத்தைப் படித்து ஆயாசப்பட்டிருக்கிறார். அவர்தம் அகப்பார்வையில் கண்ட காட்சியை, ஆதிமுதலானது தேவன் இல்லை, தேவிதான் என்று தனது கவிதையில் பதிவுசெய்கிறார். இதே காட்சியை, சமூக யாத்திரையில் உணர்ந்தெடுத்து, தனது அனுபவமாக, 1983ல் புதுதேவியை இப்படிப் படைத்திருக்கிறார் மற்றொரு கவிஞர்.

ஒரு கோதை 
தலைகோதி நடந்தாள்
சீதைக்கு நேர்ந்ததுபோல்
இங்குமொரு இராவணன் முளைத்தான்.
பீமனை உசுப்பிவிட்டு
பாஞ்சாலி போல் தலையவிழ்த்து
பார்த்தனை அழைக்கவில்லை
தலை முடித்தாள்
முந்தானை இறுக்கினாள்.
கைகள் 
செங்கல் பிளக்கத் தயாரான பின்
வழிமறித்தவன் என்ன ஆவான்?
புதுதேவி ருத்திர மூர்த்தம். 
இரவிலும் சாலையில் 
தனி நடந்தாள்.
(இரா.மீனாட்சி கவிதைகள், புதுதேவி, சுடுபூக்கள்)

பெண்களின் கற்பு நிலை

பெண்களின் பாதுகாவலன் பாரதியின் குரலில் வரும் சொற்கள்.

.......................ஆண்கள் எல்லாம் 
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று 
ஈரமின்றி எப்போதும் உபதேசங்கள்                         
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே.
ஆணெல்லாம் கற்பை விட்டுத்தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்              
நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ                       
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்பு நிலை பிறழுகின்றார்?                                   
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்                          
 கற்பு கற்பென்று உலகோர் கதைக்கின்றாரே (பாரதி அறுபத்தியாறு)

உலக இலக்கியத்திலே இதுவொரு புதுக்குரல். தமிழ் இலக்கியத்தில், பெண்ணுக்கு எதிரான தீமைகளைச் சுட்டெரிக்கும் முதல் கவிதைத்தீ. 
இதே அறச்சீற்றத்தை, கவிஞர் சிற்பியின் கவிதைகளில் நெடுகக் காணலாம். குறிப்பாக, ‘சிகரங்கள் பொடியாகும்’ கதைக் கவிதையில், 

‘நரையேறிய கவுண்டர் சேரிக்கன்னி ஒருத்தியை எரித்த காமத்தீ, அதை எதிர்த்துக் கேட்ட நியாயத்தீ, அதற்காகச் சேரியையே அழித்த மேல்ஜாதி வெறித்தீ, அதை எதிர்த்து நிற்கப்போகும் கீழ்ஜாதி உறுதித்தீ. ‘சிகரங்கள் பொடியாகும்’ ஒரு தீக்கவிதை” 

என்ற திறனாய்வாளர் நவபாரதியின் கணிப்பில் சுடர்விடும் சிற்பியின் அறத்தீ, நியாயவேள்விக்கு முதல் சமித்து ஆகிறது. கண்முன்னால் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களின் இடர்பாடுகளை எண்ணி மனங்கசியும் கவிஞர், தொன்மங்களில் இன்னலுறும் மகளிர்க்காக உரத்த குரல் கொடுக்கிறார். பாஞ்சாலிக்கு நம் பாரதிபோல. பல படைப்பாளிகளைச் சிந்திக்க வைத்த அகலிகைப் பாத்திரம், இவரது தனித்துவப் பார்வையில் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. புத்தம்புதிதாக இவர் துலக்கிக் கொடுக்கும் புதிய நாயகி, தேவயானி. காரியம் முடிந்ததும் பெண்மையைக் கைவிடும் துரோகத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாள் தேவயானி. அது,

தேவலோகத்து வானில் மட்டுமா
வஞ்சக உலக வாசல்களில்
கசனை, கயவர்களை
விடாமல் துரத்துகிறது

என்று முடிக்கிறார்.

 அண்மையில் வெளியிடப்பட்ட சிற்பியின் கவிதைத்தொகுதி, நீலக்குருவியில் ஓர் அபூர்வமான கவிதை, அபூர்வ சந்திப்பு.

முடித்த கூந்தலோடு பாஞ்சாலியும், விரித்த கூந்தலோடு கண்ணகியும் சந்தித்துக் கொண்டால், அந்த இலக்கிய சகோதரிகள் என்ன பேசிக்கொள்வார்கள்? என்று கவிஞர் அற்புதமான கற்பனைச் சித்திரத்தை, ஓவியப்படுத்தும் நோக்கில், தந்துள்ள கவிதை தமிழுக்குப் புதியது. பெண்களின் புரட்சி மனதை, பாஞ்சாலியும் கண்ணகியும் எம் சார்பிலும் பேசுகிறார்கள்.

“அக்கா...
கொடியவர் சபாமண்டபத்தில்
குமுறினாய்... சபதமிட்டாய்...
நினைத்ததை முடித்தவள்
நீ இல்லையா?”
- கண்ணகி மனமுருகச்
சொன்னாள்.
பாஞ்சாலி இடைமறித்தாள்-
“கொதியழல் சீற்றம்
கொங்கையின் விளைந்த
மங்கை நல்லாய்...
நினைவில் வை.
என் சபதத்தின் பின்புலம்
அவமானம்
உன் சீற்றத்தின் ஊற்றுக்கண்
தன்மானம்
ஆண்மையைத் தூண்டித் தூண்டி
நான் பழிமுடித்தேன்
அடி, நீ ஒற்றை மனுஷியாய்
தீமை தீப்பிடிக்கும்
நெருப்புப் பிழம்பானாய்...
பூம்புகார்ப் பொற்கொடி,
நீதானடி
நேருக்குநேர் நின்று
ஊருக்கு உலகுக்கும் 
நீதி சொன்ன பத்தினி....
உடைந்த உன் சிலம்பு
மாதர்குலத்தின்
உரிமை பேசிய வாய்...”
பாஞ்சாலி பேசிக்கொண்டே போக
முகம் சிவந்த கண்ணகி
தாயாய் அவளைத் 
தழுவிக் கொண்டாள்
(சிற்பி, நீலக்குருவி)

மாதர் குலத்தின் உரிமை பேசிய இக்காவிய நங்கையர், அக்காள் தங்கை உறவில், நெருக்கமாய்ப் பேசிக்கொண்டவர்கள், ஒருவர் மனத்துள் ஒருவர் புகுந்து ஒருவர் துன்பத்தைத் தமது துன்பமாய் உணரப்பட்ட அந்த வினாடியில் அவர்களுள் தாய்மை பொங்கிப்பிரவகிக்கிறது. கண்ணகி, தாயாய்ப் பாஞ்சாலியைத் தழுவிக் கொள்கிறாள். இளங்கோவும் பாரதியும் சிற்பியின் கவிதையை இரசிப்பதற்கு நிச்சயம் மீண்டும் பிறப்பெடுத்து வருகிறார்கள். தமிழ்த்தாய், உவகையால் நிறைந்திருக்கிறாள்.

கண்ணகியை மட்டுமன்றி, எளிய குடும்பத்துக் கன்னிப் பெண்ணையும் தனது கவிதையில் நாயகியாகவே பாவிக்கிறார் சிற்பி. குலப்பெண்ணாக வாழ விரும்பிய ஒரு கன்னிப் பெண், அவள் தன் பருவத்தைக் காணிக்கையாக வைத்துக் காயும் வயிற்றை நிரப்பவேண்டிய துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் யார்? அது அவள் விரும்பி ஏற்றதொழில் இல்லை. புலிப் பொருளாதாரத்தில் அவள் ஓர் இரைப்பொருள். அவளுடைய துன்பத்தைக் கவிஞர் சிற்பி அவளது குரலாகவே பதிவுசெய்கிறார்.

புன்மைத்தொழில் செய்து என் உள்ளம் நொந்தது. 
பொங்கிக்குமுறியது ஆயினும்
இன்னலும் ஏழ்மையும்  என்னை அழித்தன
இன்னுயிர்க் கற்பைக்குலைத்தன.
கன்னிப்பருவத்துக் காணிக்கையை வைத்துக் 
காயும் வயிற்றை நிரப்பினேன்.
துன்பத்துத் தீயிடை வெந்து கதறினேன். 
தொல்லைப்பெருங்கடல் மூழ்கினேன். 
(சிற்பி, முல்லைக்கொடி1963)

கற்புநிலை என்று சொல்லவந்தால் இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்

எனும் பாரதியம் தீர்மானமாக, நினைவில் கொள்ளும்படியான வாழ்க்கைநிலையை, முல்லைக்கொடி எடுத்துரைக்கிறது.

பெண்விடுதலை

சிற்பி பெண்களின் நிலைபற்றிப் பாடும் வரிகளில்தான் அவரது மானுடம் பாடிடும் குறிக்கோள் முழுமையான விரிவானம் தொடுகிறது என்பது என்னுடைய தீர்க்கமான கருத்து.
ஆணின் பார்வையில் விடுதலை பெற்ற பெண்ணும் ஆணும் பேசும் மொழியாக,வரும் கவிதை வரிகள் இவை.

இப்போது எங்களுக்கு இல்லை மௌன மயக்கங்கள்
ஏனெனில் எங்களை இணைத்திருப்பது 
சமூக விடுதலை இயக்கங்கள்.
(சிற்பியின் மௌன மயக்கங்கள் 1982) 

இதே கருத்து ஒரு பெண்கவிஞர் பார்வையில் ஆணுடன் பெண் பேசுவதாக வெளிப்படும் கவிதை -தலைப்பு, புதிதாய்ப் பிறக்கும் வெளிச்சங்கள். ‘தோழனே விழுவாயோ துவண்டு?’ என்று தொடங்குகிறது.

தோள் கொடுப்பேன்
சின்னத்தூக்கம் போடு
தண்ணீர் குடி
தென்றலில் விழி.
முற்றிய பசும் முள்ளில் படுக்கை.
இரும்பு இறகென் மடியில் கிடந்தாய்
நான் சத்யபாலா.
பார். 
புத்துயிர் பெற்றாயோ?
புதிதாய் எழு.
நடைபோடு நல்ல செருப்புண்டு.
தடைகளை மீறு நானுன் நிழல்.
கையில் மண்வெட்டி எடு.
கடிதில் வருவேன்
காதில் இசைப்பேன்.

நீ தாளை உழுகின்ற நேரத்தில்
நான் கவிதையுயிர் சேர்த்திடுவேன்
வா.
சமையலுக்கு அடுப்பேற்று
சத்துக்களை வேகமாக ஏற்றுவதே
என் பொறுப்பு.
இருவரின் இணைப்பில் நிச்சயம் இருட்டெல்லாம்
மடிதட்டி எழுந்தோடும் அப்போதே
புதிதாய்ப்பிறக்கும் 
வெளிச்சங்கள்... வெளிச்சங்கள்... 
(இரா.மீனாட்சி, தீபாவளிப்பகல் - 1983)

கவிஞர் சிற்பியின் ஆண்குரலோ, இந்தக் கவிதையில் வெளிப்படும் பெண்குரலோ சொல்லவரும் செய்தி ஒன்றுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இனி இல்லை மௌனமயக்கங்கள். அவர்களை இணைத்திருப்பது சமூக விடுதலை இயக்கங்கள், புதிய வெளிச்சங்கள். 

விடுதலை முயற்சி

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம் எனும் பாரதியின் புதுமைப்பெண் பொருளாதிக்கச் சமூகத்தில் எப்படி இருப்பாள்?எப்படி இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.

பொருளாதிக்கச் சமூகத்தில் 
கருகிப்போன 
கவின்மலர்கள் 
பெண்கள்.
புரட்சி பூத்த 
லெனின் திருநாட்டில்
விலை மகளிர்க்கும் 
விடுதலைகள் பூத்ததனால்...
(சிற்பி, மௌன மயக்கங்கள்)

ஏறத்தாழ, இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்ட, ஒரு பெண் கவிஞரின் கவிதையில்,  பொருளாதிக்கத்தால், களத்தில் பலிகடாக்களான இந்தியப்பெண்களைப் பற்றிய பதிவு இவ்வாறு அமைகிறது.

   ........மாயா
மதுரா
தர்ஷணா
ரமீஜா
ருக்மணி
விஜயலட்சுமி
ஞானசௌந்தரி
இன்னும் ஆயிரம் ஆயிரம் கமலாக்கள்
இளந்தேவதை நிழல்கள்
நீதி மன்றங்களைத் தேடாத
நித்ய கல்யாணிகள்
தோல்துகில் அழிந்த துருபதன்கள் கன்னிகள்
அடையாளம் காட்டத் தெரியாத
சின்னஞ்சிறு சுகன்யாக்கள்
பலியாகும் பால் கன்றுகள்
ஊர்காக்க உடுப்புப்போட்டவனின்
உடும்புப் பிடிக்குள்ளும்
பெரிய தனக்காரர்களின்
சின்னத்தனங்களிலும்
சிக்கிக் கிழிந்த தனலட்சுமிகளே,
நீங்கள் தேன்வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுரவிதைகளுக்கு மடி தந்தீர்கள்.
புலிப் பொருளியலில் போகப்பொருளானவர்களே
உணர்ச்சி ஊர்களின் 
மடைத்திறப்புகளே 
என்றைக்கு உடைத்தெறியப்போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?
(இரா.மீனாட்சி, தீபாவளிப்பகல் 1983)

இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். இன்றும் கவிஞர்கள் இதைவிட ஆவேசமாகவே, பாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆண்- பெண் உடற்காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடற்காதல் எப்படி முரண்களில் முடிகிறது, என்பதை அவன் அவள் அது எனும் கவிதையில் சொல்கிறார் சிற்பி.

அவனும் அவளும் சந்தித்தபோது 
அது வந்தது
காதல் 

அவனும் அவளும் நெருங்கியபோது 
அது வந்தது
கர்ப்பம் 

அவனும் அவளும் தம்பதியானபோது 
அது வந்தது
குழந்தை

அவனும் அவளும் அலுவல் பார்த்தபோது
அதுவந்தது
சந்தேகம்.

அவனும் அவளும் முரண்பட்ட போது
அதுவந்தது
பிரிவு. 
(சிற்பி அவன் அவள் அது 2003)

இதே நவீன கலாச்சாரச்சூழ்நிலையை, அவனுக்கும் அவளுக்குமான காதல் வாழ்க்கையைப் பேசும் பெண் கவிஞர் கூடுதலான தாபத்துடனும், சீற்றத்துடனும் சொல்கிறார்.

அவன் காதல் 
நாயில் ஆரம்பித்து 
நாயில் முடிந்தது.
கொஞ்சல்
கடி 
வெறி
மாமிசம் 
தெருப்பொறுக்கல்
ஊர்சுற்றல் 
கழுத்துப்பட்டை
காசுவில்லை
பதிவு எண்
ஊசிகள் குட்டிகள்
குரைப்பு 
அப்புறமென்ன
காதலாவது 
கத்திரிக்காயாவது 
(இரா.மீனாட்சி, சத்தான காதல், தீபாவளிப்பகல் 1983)

சுரண்டப்படும் பெண்கள்

ஆண்டாண்டு காலமாக, வேளாண்நாகரிகத்திலும் சரி, தொழில் யுகத்திலும் சரி, பெண் அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடுவாள். அதற்கான ஊதியமோ, குறைவாக இருக்கும். அவளுடைய உழைப்பிற்கு ஏற்ற மரியாதை எப்போதுமே குறைவுடையதுதான்.
சிற்பி, சாலைப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கூலிக்காரியின் நிலைமையை, பின்வருமாறு எடுத்துச் சொல்கிறார்.

பார்வைக்கறைகள் பட்டுக் கிழிந்த 
பழைய ரவிக்கைக்கந்தல்
கங்காணி மகன் கண் சிமிட்டிடக் 
கனல் பிறந்ததும் உண்டு - ஒரு சிங்காரப்பயல் சிரிப்பில் விழுந்து 
கதை பிறந்ததும் உண்டு 
(சிற்பி,கூலிக்காரி - 1971)

இதே இழிநிலையைப் பெண்ணின் குரலிலேயே தொடர்ந்து பேசுகிறார் ஒரு கவிதாயினி.

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் 
சூரியன் ஊடுருவும் சல்லாத்துணிகள்
ஜோடி நேராத ஒற்றைச்செருப்புகள்
ஊஞ்சலாடும் சாரங்கள்
பல்போன ஏணிகள்.
எங்களுக்கும் சட்டம் உண்டு
அது மண் சலிக்கும்
எங்களுக்கும் திருவிழா
தெருவோரங்களில் தினந்தினமுண்டு
நாங்களே தேராகி
சுண்ணாம்பு மஞ்சனத்துடன்
குலுங்க வருவோம்
செங்கல் வியர்வை அபிஷேகம்
கொத்தும் மேஸ்திரியின் அர்ச்சனைகள்
எங்கள் வயிறெல்லாம் கொப்புளங்கள்
இறக்க முடியாத சுமைகள்
புழுதிகளில் பூக்கும்
எங்களை எழுப்ப
என்ன அவதாரம் எடுக்கப் போகிறாய்
தோழியர் சீதையின் தோழமை ராமா,
உன் நாமமே இனிக்கிறது
இராம இராம சீதாராமா
 (இரா.மீனாட்சி, சுடுபூக்கள் 1973)

பெண்களின் வாழ்க்கைவாசல்

உலகத்தில் பலவேறு சமுதாயங்களில், காலங்காலமாகப் பெண்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட ஒரே வாசல் திருமணம் மட்டுமே. பிரமச்சரியமும் துறவும், அது சார்ந்த தொண்டு வாழ்வும் புறக்கணிக்கப்பட்ட  நிலையிலேயே, இந்தியத் தமிழ்ச்சமுதாயங்கள் உள்ளன. பெண்களின் விடுதலையை, பெண்கள் அவர்களாகவே விரும்பி ஏற்கும் பரிபூரண விடுதலையை, யார் பேசுவது? ஒரு சான்று. சிற்பியின் கவிதை, ‘கன்யா குமரி’

எதற்காக இந்தத் தவம்
முதிர்கன்னிகளின் துக்கத்திற்குக் குறியீடா
அல்லது விடுதலைப்பெண்கள் போல் 
விவாக வாசலை அடைத்துப்போட்டிருக்கிறாயா
 (சிற்பி, கன்யாகுமரி 1996)

1983லேயே கன்யாகுமரிகளுக்காக ஒரு மற்றொரு குரல் எழும்புகிறது.

எங்களின் சௌபாக்கியம்
மஞ்சள் பூ மரத்தடியில்
இலுப்பையில் எண்ணை உண்டு
இரைப்பையை நிரப்பிடுவோம்
சொந்தக்கருப்பையை ஏன் குத்தகைக்கு விடணும்?
நாங்கள் கூட்டமாய் குரவை இட்டுக்
கன்னியராய் வீடுசெய்வோம்
நீங்கள் சும்மா இருங்களேன்
(இரா.மீனாட்சி,மகள்களுக்காகப் பேசுவது, தீபாவளிப்பகல் 1983)

பெண்மைக்கு எதிரான வன்முறை

இயற்கைச்சீற்றங்களுக்கும், இனக்கலவரங்களுக்கும், யுத்தங்களுக்கும் முதலில் பலியாவது பெண்களே. எதிரிகளின் கலாச்சார அழிப்பிற்கான இலக்குப் பெண்களின் வாழ்வாதாரங்களே. வங்கப்பிரிவினையால் கொந்தளித்து நாடு கிடந்தபோது, பெண்மைக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பின்வருமாறு கதைக்கவிதையில் சித்திரிக்கிறது சிற்பியின் கவியுள்ளம். 

............ கடவுளே இது என்ன காட்சி
இடது மார்பகம் இருந்த இடத்தில் ஒருவடு
உருத்தெரியாமல் அறுத்தெறியப்பட்ட 
செம்புண் தழும்போடு 
ஒரு நீண்ட வடு
வெட்கித்தலைகுனிந்தேன்
அப்போது அவள் சொன்னாள்
  “பாபு நான் பங்களா தேஷ் அகதி
இது நாய்கள் கிழித்த காயம் பாபு”
                (சிற்பி, சாக்கடைகள் இன்னும் வற்றிவிடவில்லை 1970)

மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் பிரிந்து வங்தேச விடுதலை அரசு செயல்பட முடியாத நேரத்தில் வெடித்த மக்கள் புரட்சி வங்கதேச யுத்தமானது. இந்தியா வங்கதேச மக்களை அரவணைத்தது. கிழக்கு வங்காளத்தில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி பல்லாயிரக்கணக்கான அகதிகள் வந்தபோது பாரதம் உதவிக்கரம் நீட்டியது. வங்கதேச அகதிகளுடன் பணிசெய்தநேரத்தில், அகதிகள் முகாமில் பதிவு செய்யப்பட்ட பாடலின் பாதிப்பாக விளைந்த ஒரு கவிதை-

..............................
குங்குமம் சிவப்பிழக்கிறது
சரடு மங்கலம் இழக்கிறது
வளர்ந்த பிள்ளை சரிந்து விழ
கைக்குழந்தை சதைகிழிய
இளங்கரு குருதி மூட்டையாக
முலைமுனை முரிய
எல்லாம் சாம்பல் மேடு
மீண்டும் வெடிக்கிறது.

எனக்கின்னும் திருமணமில்லை
தோளுக்குத் தோழனில்லை
இடுப்புக்குப் பிள்ளையில்லை
போருக்கனுப்ப நாதியில்லை
கட்டாயச்சாவின் 
சிவப்பிரையாக
எதனைத் தருவேன்?
.........................................
          (இரா.மீனாட்சி, யுத்தகீதம், சுடுபூக்கள் 1973)

யுத்த காலக் கொடுமைகளின் நேரடியான பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களைப் பற்றிய கருத்தான கவிதைகள் இவை.

நிறைவாக...

கவிஞர் சிற்பி, பெண்ணை ஓகோ என்று புகழ்ந்து சொல்லேணியில் ஏற்றி ஆகாயத்தில் மிதக்க வைப்பதும் இல்லை. சொல்லால் காயப்படுத்திப் புழுதியில் இழுத்து மிதிப்பதும் இல்லை.
அவருடைய கவிதைப்பெண்கள் சாதம் படைப்பவர்கள்; புதுயுகம் சாதிப்பவர்கள். சாதாரணமானவர்களின் ரணங்கள், கவிஞரின் பார்வைபட்டு மருந்து பூசிக்கொள்கின்றன. சிற்பியின் மயிலிறகு ஒத்தடம் அவரது விழியோரக் கண்ணீருடன் இதமாகத்தோழமை கொள்கிறது.
பாரதிபோல முண்டாசு கட்டிய கவிதைகள். ஆண்டாளைப்போல திருப்பள்ளி எழுச்சி பாடிக்கொள்கின்றன. 

கவிஞர் கற்பனைப் பெண்பாத்திரங்களையும் படைத்திருக்கிறார். நவீன காலத்தில் வாழும் பெண்களின் பிரச்சினைகளையும் பேசுகிறார். வருங்காலத்தை நோக்கிப் போராடிச் செல்லவேண்டி, புதுயுகப் பெண்களுக்கான இலட்சியப்பாதைகளையும் அமைத்துத்தருகிறார்.
பாரதியின் மனது பெண்ணின் நலம் பாராட்டும். பாரதிதாசனின் மனது பெண்ணுக்குச் சம உரிமைத் தோழமை ஏற்கும். மார்க்சிய மனது, பெண்களுக்கு எதிரான தீய சக்திகளை எரித்திடும். ஈரோட்டுப் பெரியாரின் ஆவேச மனது. அமில மழையில் நனையும் அத்தனை பெண்களையும் காப்பாற்றத் தவிக்கும் அம்மாவின் பெரிய மனது. இவர்கள் இத்தனைபேருடைய தாக்கங்களையும் ஏற்றுள்ள கவிஞர் சிற்பிக்குள், ஒரு தாய், ஒரு தோழி, ஒரு சகோதரி, ஒரு போராளி பெண்ணாகி ஒளிர்வதைக் காண முடிகிறது. அது புதுமை.


துணை நின்ற நூல்களுள் சில...

1-2. சிற்பி கவிதைகள், இருபெருந்தொகுதிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. சிற்பி, நீலக்குருவி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
4. நவபாரதி, சிற்பி- மௌனம் உடையும் ஒரு மகாகவிதை, ஒரு மகாதரிசனம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
5. மீனாட்சி கவிதைகள், காவ்யா வெளியீடு, சென்னை.
6. இரா.மீனாட்சி, வாசனைப்புல், மித்ர வெளியீடு, சென்னை.
7. பாரதியார் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.
8. ஸ்ரீஅரவிந்தர், வருங்காலக்கவிதை, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம், புதுச்சேரி.
9. நித்தியபாரதி, மாதஇதழ், சிதம்பரம்.
 ------------------------------------------------------------------------------------------------------------
முனைவர் சொ.சேதுபதி
"எதிர்பாராத முத்தம்" என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பாரதிதாசனின் நூல் இது என்று
நினைவுக்கு வருகிறதா?

உண்மைதான்.

இத்தலைப்பு பாரதிதாசனோடு தொடர்புடையது என்றாலும் இக்கட்டுரை அந்நூல் பற்றியதல்ல.

இது என்ன புதிர்...?

தொடர்ந்து படியுங்கள்.

புரியும்.

1963ஆம் ஆண்டு.

பாரதிதாசனைச் சந்திப்பதற்காக மூன்று பேர் சென்றுகொண்டிருந்தார்கள்.

- ஒருவர் கவிஞர் பொன்னடியான்
- மற்றொருவர் சோமையா என்னும் பதிப்பாளர்
- மூன்றாமவர், அவருக்காகத்தான் அவர்கள் இருவருமே பாரதிதாசனைச் சந்திக்கப் போகிறார்கள்.

அவர் ஒரு கவிஞர்; இளம் பேராசிரியரும்கூட. அவர் புதிதாக ஒரு கவிதைத் தொகுப்பு நூலை
வெளியிட இருந்தார். அதற்குப் பாரதிதாசனிடம் முன்னுரை பெறத்தான் அம்மூவரும்
பாரதிதாசனைப் பார்க்கச் சென்றனர்.

பாரதிதாசன் படுக்கையில் ஓய்வாகப் படுத்திருந்தார். வணக்கம் கூறி, வந்த நோக்கத்தைச் சொல்லிக்
கவிஞரை, பாரதிதாசனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது, முன்னுரை பெறவந்த
கவிஞருக்குத் தமது வகுப்பறை நினைவுக்கு வந்துவிட்டது.

பாரதிதாசனின் மாணவரும், தமது பேராசிரியருமான ஒருவர் உணர்வு கொப்பளிக்கப்
பாரதிதாசனின் பாடல்களைச் சொல்லி, அதற்குள் புதைந்திருக்கும் கவித்துவத்தை,
புரட்சிப்பாங்கை விளக்கிக் கொண்டிருந்த காட்சி மனதுக்குள் கவியத் தொடங்கியது.

தம்மை ஒரு கணம் உற்றுப்பார்த்த பாரதிதாசனை நோக்கி, "வணக்கம், நான் பேராசிரியர்
மு.அண்ணாமலையின் மாணவன்'' என்று கரங்குவித்தார் அந்த இளங்கவி.

கேட்டவுடனே, படுக்கையில் படுத்திருந்த பாரதிதாசன் எழுந்து உட்கார்ந்தார். இளங்கவியைப்
பக்கத்தில் அழைத்தார்.

"அப்ப நீ என்னுடைய மாணவனுக்கு மாணவன்னு சொன்னா, நீ எனக்குப் பேரன்'' என்று மகிழ்ந்து
சொன்னபடி அந்த இளங்கவியின் நெற்றியில் முத்தமிட்டார்.

பாரதிதாசனின் "எதிர்பாராத முத்த"த்தால் மெய்சிலிர்த்துப்போனார் இளங்கவி.

முன்னுரை பெறவந்த தமது கவிதைத் தொகுப்பை அவரிடம் கொடுத்தார்.

பாரதிதாசன் தருவதாக இசைந்து மறுநாள் அவர்களை வரச்சொன்னார்.

மறுநாள் மிகவும் பயந்தபடி அந்த இளங்கவிஞர் தமது நண்பர்களுடன் பாரதிதாசனைப் பார்க்கப்
போனார். காரணம், பாரதிதாசன் பலருக்கு எழுதிய முன்னுரைகளைப் படித்த அனுபவம். அண்மையில்
அவரது முன்னுரை ஒன்றில், இந்தக் கவிதைகளைத் திருத்திப் படித்துக்கொள்ளலாம் என்ற
விமர்சனத்தோடு பாரதிதாசன் எழுதியிருந்தார்.

அதுபோல், தமது நூலுக்கு எப்படி எழுதியிருப்பாரோ, என்று சற்றே பயந்திருந்தார் இளங்கவி.
ஆனபோதும், நமது காலத்தில் வாழுகிற ஒரு பெருங்கவி. பாரதியாரைத் தரிசித்தவர். அவரது
பேரன்புக்குப் பாத்திரமான சீடர். எனவே அவர் என்ன எழுதியிருந்தாலும் சரி, பெற்றுக்கொள்வோம்
என்று நினைத்துக்கொண்டார்.

பாரதிதாசன் அக்கவிஞரின் நூலுக்குத் தாம் எழுதியிருந்த முன்னுரையைக் கொடுத்தார்.

எழுத்து, கொஞ்சம் கோணல் மாணலாக இருந்ததைப் பிரதி எடுத்துக்கொள்ளச் சொன்னார். வியப்பும்,
மகிழ்வும் தரும்படி அமைந்த முன்னுரைக் கவிதையைத் தம் அழகான கையெழுத்தில் படியெடுக்கத்
தொடங்கினார் இளங்கவி.

"அண்ணா மலைப்பல் கலைக்கழகப் பேராசான்
  அண்ணா மலைஎன் அரியதமிழ் மாணவனின்
  கண்ணான மாணவன்நான் என்று கழறித்தம்
  கையெழுத்துப் படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே
  அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்
  நான்அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான் செய்தேன்
  கண் செலுத்த வேண்டுமென்றார்
  மாட்டேனென் றாசொல்வேன்
  கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான்கண்டேன்
  பாட்டுத் திறம் கண்டேன் பாலசுப்பிர மணியப்
  பாவாணர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில்
  நாட்டுத் திறம்என்னே நாற்கவியும் முத்தமிழும்
  நல்கும் பயன்என்னே நாவூறிப் போனேன் நான்
  வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க
  வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல்
  பாட்டை திறக்க வந்த பாலசுப் பிரமணியப்
  பைந்தமிழ்ப் பாவாணர் புகழ்பெற்று வாழியவே''.

என்று முடித்திருந்தார்.

நெகிழ்ந்தபடி படியெடுத்த இளங்கவி ஒரு தமிழ்ப் பேராசிரியரும் ஆனபடியால், "பாட்டை
திறக்க வந்த" என்ற இடத்தில், இலக்கணப்படி வல்லொற்று (த்) மிகும் என்பதால், பாட்டைத் திறக்க
வந்த என்று பிரதியில் எழுதிப் பாரதிதாசனிடம் நீட்டினார்.

வாங்கிப் பார்த்த பாரதிதாசன், "நான் என்ன எழுதியிருக்கேன்? நீ என்ன எழுதியிருக்கே?''
என்று செல்லமாகக் கடிந்துகொண்டு அந்த "த்" ஐ அடித்துவிட்டு, பாரதிபோல், "பாட்டை -  
பாதை திறக்க வந்த பாலசுப்பிரமணியம் என்றல்லவா எழுதியிருக்கிறேன்'' என்றார்.

நெகிழ்ந்துபோனார் இளங்கவிஞர்.

பாரதிதாசன் வாக்குப் பொய்க்கவில்லை.

பாரதி மரபில் தமது இலக்கியப் பயணம் தொடர்ந்து, தமக்கெனத் தனிநடையுடைய கவிஞராய், இனிய
மொழிபெயர்ப்பாளராய், கட்டுரையாளராய், கவிதை, காவியம், கவிதை நாடகம், சிறுவர்
பாடல்கள், ஆத்திசூடி என்று பாரதியார்போல் படைப்பு பல படைத்து பல விருதுகளும் பெற்ற
அவர், ஆண்டுதோறும் தமது பெயரில் கவிஞர்களுக்கு விருதளித்து இன்று பவளவிழா காணுகிறார்.

அந்தக் கவிஞர் வேறுயாருமல்ல, சிற்பி பாலசுப்பிரமணியம்தான். பாரதிதாசனிடம் "எதிர்பாராத
முத்தம்" பெற்ற அந்தக் கவிஞருக்கு நேற்று (31.07.2011) பவளவிழா.

கிருங்கை சேதுபதி

நன்றி:- தினமணி  
------------------------------------------------------------------------------------------------------------------------------------


பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
                        முனைவர் மு. பழனியப்பன்
                        இணைப்பேராசிரியர்,
                        மா. மன்னர் கல்லூரி,
                        புதுக்கோட்டை


    பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை  பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு  அரசியலை  இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்.

ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி.  சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் பால் சார்ந்த படைப்பு அரசியலை அப்படியே வெளிப்படுத்த முனைகின்றனர். சிலர் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஆணாதிக்க அரசியலை தெளிவாக வெளிப்படுத்திடாமல்  பொதுமைப்படுத்தி வெளியிடுவதுபோல ஆண்சார்புக்கு அவர்கள் இட்டுச் சென்றுவிடக் கூடும்.

இன்னும் சிலர் தன் படைப்பில் பெண்பாலாற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல படைத்தளிக்கலாம். ஆனாலும்  இம்முக்கியத்துவத்திற்குள் ஆண்சார்புத் தன்மை ஒளிந்துக் கோலோச்சிக் கொண்டு இருக்கும்.

ஒருபடைப்பின் உண்மைத் தன்மை என்பதை நிலைநாட்ட அதனை ஒவ்வொரு கோணத்திலும் ஆராயவேண்டும். பெண்ணிய நோக்கில், பெண்மனத்தின் அடிப்படையில் ஒரு ஆண்படைப்பினை உணர்கின்றபோது பெண்ணுக்கு எதிராகப் புனைந்துள்ள பல கருத்துகள் அப்படைப்பில் இருப்பதை இனம் காண முடியும். இவ்வகையில் ஆண் படைப்புகளில் உள்ள பெண்ணுக்கு எதிரான கருத்துக்களை இனம் காட்டுவது பெண்ணிய வாசிப்பு ஆகின்றது.

    கேட் மில்லட் என்ற பெண்ணிய அறிஞர் " ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆளுமை மிக்கதாக இருக்கும் ஒரு பாலினம் தனக்கு கீழ்ப்பட்ட பாலினத்தின் மீது தன்னுடைய வலிமையை நிலைநாட்டிக் கொள்ள, அல்லது தன் வலிமையை அதன் மீதுகாட்ட முயன்று கொண்டே இருக்கும் ''  என்று ஆதிக்கத்  அரசியலின் இயல்பை எடுத்துரைக்கிறார். இக்கருத்தின்  அடிப்படையில் காணுகின்றபோது  ஆண் ஆதிக்கச் சூழலில் படைக்கப்படும் படைப்பு ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும் என்பது உறுதியாகின்றது.  அவ்வாதிக்க சூழல் பெண்பாலினை அடக்கி வைக்கவே முயற்சிப்பதாகவே இருக்கும்.

    மணிமேகலை என்ற காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் எவ்வகைப்பட்ட  ஆதிக்கம் புறச் சூழலில், படைப்புச் சூழலில் நிலவியது என்பதை முதலில் ஆராய வேண்டும். அதாவது ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்பன அனைத்தும் ஆணாலேயே எழுதப் பெற்றுள்ளன. மேலும் கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி,, பாஞ்சாலி சபதம், மனிததெய்வம் காந்தி காதை, மாங்கனி போன்ற பல காப்பிய முயற்சிகள் அனைத்தும் ஆண்களாலேயே  படைக்கப் பெற்றுள்ளன. பெண் எழுதிய காப்பியம் என்ற அளவில் இனம் காணக் கூடிய ஒன்றே ஒன்று அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் மட்டுமே. காந்திபுராணமும் காந்தி என்ற ஆண்தலைவரையே கதைத்தலைமையாகக் கொண்டுள்ளது. எனவே இதுவும் ஆண் ஆளுமையைச் சிறப்பிக்கும் போக்கினது என்பதில் ஐயமில்லை.


    இத்தகைய சூழலில் காப்பியம் என்ற வடிவம் ஆண்களுக்கு உரிய படைப்பு வடிவமாகவே பெரும்பாலும் தமிழ்ப்பகுதியில் விளங்குவது தெரியவருகின்றது. எனவே காப்பிய வெளி என்பது பெண்களுக்கு திறக்காத இருப்புக் கதவாகவே அமைந்துவிட்டதை உணரமுடிகின்றது.

    மணிமேகலை சிலப்பதிகார காப்பியத்தின் தொடர்வாய் படைக்கப் பெற்றது.

"தெரிவுறு வகையால் செந்தமிழி யற்கையில்
  ஆடிநன்னிழலின் நீடிருங் குன்றம்
  காட்டுவார்போல் கருத்து வெளிப் படுத்து
  மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
  சிலப்பதிகாரம் முற்றும்'' 

என்ற நூற்கட்டுரைப் பகுதி இதனைத் தெளிவு படுத்தும். சிலப்பதிகாரம் எழுவதற்குக் காரணமாக சூழலும் இங்குக் கவனிக்கத்தக்கது. குன்றக்குறவர் பத்தினிப் பெண் ஒருத்தி விண்ணகம் ஏறிச் சென்றதைக் கண்ட அதிசயக் காட்சியை இளங்கோவடிகளிடம் கூறுகின்றனர். அப்போது உடனிருந்த சாத்தனார் "யான் அறிகுவன்அது பட்டது என்று உரைப்போன்'' என்று கோவலன் கண்ணகி வரலாற்றை எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட இளங்கோவடிகள் "நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்'' என்று கூறி சிலப்பதிகாரத்தைப் படைக்கின்றார். இது முவேந்தர்க்கு உரியது என்பதன் காரணமாக "நீங்களே படைக்கலாம்'' என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதன்காரணமாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைக்க முயலுகின்றார் என்ற படைப்புச் சூழல் இங்குக் கவனிக்கத்தக்கது. இவற்றின்முலம் ஆண் படைப்புச் சூழலில் சிலப்பதிகாரம் உருவாகியது என்பதையும் அதன் தொடர்வாக தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்தார் என்பதும் தெரியவருகிறது.

    மணிமேகலையின் பதிகப்பகுதியில் இடம்பெறும்

     " இளங்கோவேந்தன் அருளிக் கேட்ப
       வளம் கெழு கூலவணிகன் சாத்தன்
       மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
       ஆறுஐம் பாட்டினுள் அறியவைத்தனன் என்''
என்ற அடிகளின் வழியாக இளங்கேவடிகள் கேட்ப சாத்தனார் மணிமேகலை துறவு பெற்ற கதையினை வடித்த செய்தி தெரியவருகின்றது.

இதன்வழி இரட்டைக் காப்பியங்கள் இரண்டும் ஆண் சொல்ல ஆண் கேட்கும் தன்மையில் செய்யப் பெற்ற ஆண் வயப்பட்ட சூழலைப் பெற்றுள்ளன என்பது உறுதி.

எனவே காப்பியம் என்ற வகைமையை ஆக்குவதிலும், இரட்டைக் காப்பியங்களான சிலம்பும் மணிமேகலையும் ஆண்கள் அருகிருக்க படைக்கப்பெற்ற காப்பியம் என்பதை எண்ணும்போதும் ஆண் சூழலில்தான் மணிமேகலை படைக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

மணிமேகலை யாக்கப் பெற்ற காலத்தில் அரசமுறைமை என்பது ஆண் வயப்பட்டது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஏனெனில் தூங்கெயில் எறித்த தொடிதோட் செம்பியன் என்ற அரசன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாத் தொடங்க ஏற்பாடு செய்ததாக ஒரு குறிப்பு மணிமேகலையில் இடம் பெறுகின்றது. எனவே அரசாட்சியும் ஆண்பாலிடத்தில் இருந்தது என்பதும் இங்கு உணரத்தக்கது.

இவ்வாறு ஆண் வயப்பட்ட அரசியல் சூழ்நிலையில் படைக்கப்படும் இலக்கியம் ஆண்வயப்பட்ட செய்திகளையே கொண்டிருக்க முடியும்.

மணிமேகலை என்ற பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட காப்பியம், கணிகை ஒருத்தியின் பெண்ணை துறவி என்ற உயர் நிலைக்கு உயர்த்திய காப்பியம், பெண்களும் துறவேற்கலாம் என்பதன் அடையாளமாக விளங்கும் காப்பியம் போன்ற கருத்துகள் மணிமேகலையைப் பற்றிக் கட்டப் பெற்றுள்ள கருத்துகள் ஆகும்.

 "பேரழகுச் செல்வி மணிமேகலையை ஒரு பெண்ணைப் பேரறிவுச் செல்வியாய்ப் பிறங்க வைத்து, பேரறச் செல்வியாய் நடமாடவிட்டு, மாதவச் செல்வியாய் மிளிரச் செய்து, பொதுநலச் செல்வியாய்  சேவைச் செல்வியாய் தியாகத்திலகமாய்த் திகழச் செய்து காப்பியத் தலைமகளாக்கி, அக்காப்பியத் தலைப்புக்குரியவளாகவும் உயர்த்திய பெண்மை போற்றும்  பெருங்காப்பியம் ''

"அவள் (மணிமேகலை) காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும், இளமையும், அறிவும், பண்பும் நிரம்பிய அவள், அரசிளங்குமாரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம். அதைவிடப் பெரியது அவள் அருள்நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு  ஆகும்''

மேற்கண்ட கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாறுகளில் மணிமேகலை பற்றி அறிமுகப்படுத்தும் வரிகள் ஆகும். இவை மிகுத்து உரைக்கின்றன என்பது மணிமேகலையை முழுதும் கற்கப் புகுவோருக்குத் தெரியும்.

மணிமேகலைக் காப்பியம் பெண்ணை மையப் படுத்தி எழுதப் பெற்றக் காப்பியம் என்றாலும் சீத்தலைச் சாத்தனார் காலத்தில் பெண்களுக்கு இருந்த எல்லைகளை விளக்கும் காப்பியம் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். பெண்களைப் பற்றி எழுதத் துணிந்த காப்பியம் என்று அதனை ஏற்றுக் கொண்டாலும் அது பெண் பாலினரை அடக்கும் ஆண் சார்பு காப்பியம் என்றே நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்தே இக்கட்டுரை படைக்கப் பெறுகின்றது. இக்கட்டுரையின் எல்லை கருதி இங்கு மணிமேகலை என்ற பாத்திரம் மட்டுமே கொள்ளப்படுகின்றது. மற்ற பாத்திரங்கள் இதே நோக்கில் நோக்குகின்றபோது இன்னும் இவ்வாய்வு வலுப் பெறும். அதிக கருத்துகள் கொண்டிலங்கும்.

மணிமேகலை பிறந்த செய்தியை சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. அவள் வளர்ந்து பௌத்த துறவியாக மாற்றப் படுவதற்கான ஆயத்தநிலையில் இருந்து மணிமேகலை தொடங்குகின்றது.  மணிமேகலை யார் என்பதைப் படிப்பவர்க்கும், மணிமேகலைக்கும் உணர்த்தும் முறையில் ஊரலர் உற்றகாதையில் மாதவி சில செய்திகளை எடுத்துரைக்கின்றாள்.

அதில் தான் பெற்ற மகளைக் கண்ணகியின் மகள் என்று நிறுவ முயற்சிக்கிறாள்.

    "மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
      அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
      திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்''
(5557)
என்ற மாதவியின் கூற்று மணிமேகலை தன் மகளாய் இருக்கின்ற நிலை வரை கணிகையாகவே இருக்கக் கூடும். எனவே அவளை மேல்நிலைப் படுத்தும் முயற்சியில் பத்தினித் தன்மை வாய்ந்த குலமகளாய் அறிவிக்கின்ற பெருமுயற்சியை மாதவி செய்கின்றாள். இதனை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன.

 இருப்பினும் மாதவியின் தாய் சித்திராபதி காப்பியத்தின் பல இடங்களில் மணிமேகலையை கணிகையாகவே உலகிற்கு அறிவிக்கிறாள்.

    " தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
      மணிமேகலையொடு மாதவி வாராத்
      தணியாத் துன்பம் தலைத்தலைமேல்வர''
( ஊரலருற்ற காதை 35)

என்று மணிமேகலைப் பாத்திரம் சித்திராபதியின் வாயிலாக அறிமுப்படுத்தப்படும்போதே கணிகையாக காட்டப் பெறுகின்றது.

    கன்னிக்காவலும், கடியின் காவலும்
    தன் உறு கணவன் சாவுறின் காவலும்
    நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது
    கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
    பெண்டீர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
    நாடவர் காண நல் அரங்குஏறி
    ஆடலும் பாடலும் அழகும் காட்டி
    கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
    செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்
    கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
    பண்தேர் மொழியின் பயன் பலவாங்கி
    வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
    பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்
    கோன்முறை அன்றோ குமரற்கு'' என்றலும்
( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 98111)

    என்ற பகுதிகள் மணிமேகலை காலத்தில் இருந்த கணிகையர் குலப் பெண்கள் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளன. " கொண்டிமகளிர் '' என்ற மரபினள் என மணிமேகலையை அவளின் பாட்டியே உரைக்கும் கீழ்மை அவ்வப்போது காப்பியத்தில் தலை தூக்கச் செய்யப் பெற்றுள்ளது.

    இது மட்டுமில்லாமல் ஊரார்களும் மணிமேகலை, மாதவி ஆகியோரின் செய்கையை கேலிபேசக் கூடிய சூழலும் காட்டப் பெற்றுள்ளது.

    "விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
    காணிய சூழ்ந்த கம்பலை மக்களின்
    மணிமேகலை தனை வந்துப் புறம் சுற்றி
    அணிஅமை தோற்றத்து அருந்தவப்படுத்திய
    தாயோ கொடியள் தகவு இலள் ''
                (மலர்வனம் புக்க காதை, 146150)
என்ற பகுதியில் மக்களும் மாதவி கணிகை என்ற நிலையில் திரிந்துவிட்டாள் என்பதற்காக ஏசுவதாக படைக்கப் பெற்றுள்ளது.   இவ்வடிகளில் மணிமேகலையைக் காணவந்த மக்களின் இயல்பிற்கு பேடியைக் காணவந்த கூட்டம் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளது எனின் பேடியை ஒத்து இருந்தனளா மணிமேகலை என்ற கருத்தும் இங்கு ஏற்படுகின்றது.

    இவ்வகையில் மணிமேகலையை மேல்நிலைப் படுத்தும் முயற்சிக்குச் சரிசமமாக அவளை கீழ்நிலைப்படுத்தும் முயற்சியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி மணிமேகலைக் காப்பியத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

மாதவி, சித்திராபதி என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும், மாதவி, மணிமேகலை என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும் வைத்துக் கொண்டு இச்சூழலைச் சற்று விரிவாக்கிப் பார்க்கவேண்டி உள்ளது.

சித்திராபதி தன் மகளை கணிகையாக வளர்த்துத் தன்னிலையை உறுதிப்படுத்திக்கொண்டாள். அச்சித்திராபதி தன் பேத்தியையும் இதே வழியில்  இட்டுச் சென்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதற்காக அரச குமாரனின் உதவியை அவள் நாடுகிறாள்.

மாதவி தன் மகளை கணிகையாக ஆக்கிவிடாமல் காக்கும் முறைமையில் ஈடுபடுகிறாள். அசோக குமாரன் என்ற இளவரசன் மணிமேகலை மீது மையல் கொள்ளுகின்றான். இவனின் மையல் என்பது கணிகை மீது கொண்ட காம மயக்கமாகவே உள்ளது. இந்த மயக்கத்தை உடையவனோடு மணிமேகலை கற்புடைப் பெண்ணாக வாழமுடியாது. அரசனுக்கு ஆட்பட்டவள் பின்னாளில் அனைத்துத் தரப்பினரின் இச்சைக்கும் ஆட்படவேண்டிய அபாயமும் உள்ளது. இந்நிலையில் மணிமேகலை என்ற பாத்திரத்தை பலர் காண ஆடச் செய்யவும் முடியாமல், கற்புடைப் பெண்ணாக குடும்ப நிலைக்கு இட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கும் சூழலில் மணிமேகலையைத் துறவியாக்குவதே சரி என்று மாதவியோ அல்லது சாத்தானரோ முடிவு கொள்ளுகின்றனர். இதன் வழி காப்பியம் வளருகின்றது.

இப்போது மணிமேகலையைத் துறவியாக்கிவிடுவதற்காகவே மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் அவள் என்ற குறிப்பு காப்பியத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.

பெண்ணிய நிலையில் சிந்திக்கையில் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை என்றால் அவளையும் கற்பு வாழ்க்கைப் படுத்தியிருக்கலாமே? என்ற ஐயத்திற்கு விடை இல்லை. கணிகை குலத்தவள் கற்பு வாழ்வு வாழ அக்காலச் சூழலில் இடம் இல்லை. கணிகையைக் காமத்திற்கு உரியவளாகவே சமுகம் கருதியிருக்கிறது. அழகான இளம் பெண் காப்பார் அற்று இருக்கும் சூழலில் அவள் காமப்பொருளாகவே ஆக்கப்படுவாள் என்ற முறையே இன்றுவரைக்கும் நிலவி வருகின்றது. இதே சூழலே மணிமேகலைக்கும் வாய்த்திருக்கின்றது. இதிலிருந்துத் தப்பிக்க ஒரே வழி அவளைத் துறவியாக்குவதே என முடிவு கட்டி அவள் "தீத்திறம் படாஅள்'' என்று அளபெடை கொடுத்துப் படைப்பாளன் தன் கருத்தையும் மாதவி கருத்தையும் உடன் படுத்துகிறான்.

மாதவியின் வாயிலாக மணிமேகலை  தன்  கதை, தன் பெற்றோர் கதை ஆகியனவற்றை அறிந்து கொள்வதாக காப்பியத்தின் முன்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இவற்றோடு மணிமேகலை தன் முற்பிறப்புக் கதையையும் காப்பியப்  போக்கில் அறிந்து கொள்ளுகிறாள். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் இச்செயல்பாடு மணிமேகலைக்குக் கிடைக்கின்றது.

மணிமேகலை முற்பிறவி வரலாறு ஒன்றும் இக்காப்பியத்தில் காட்டப் பெறுகின்றது. அதாவது அவள் முற்பிறவியில் இராகுலன் என்பவனின் மனைவியாக இருந்தாள் என்பது அக்கதையின் சாரமாகும்.

    அசோதர நகரத்தை ஒருகாலத்தில் ஆண்ட இரவிவன்மனின் மனைவி அமுதபதி ஆவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் இலக்குமி என்பவள் ஆவாள். இவளே பின்னால் மணிமேகலை என்னும் பிறவி எடுக்கிறாள். இவளுடன் பிறந்தவர்கள் தாரை, வீரை ஆகியோர் ஆவர். பின்னாளில் இவர்கள் மாதவியும், சுதமதியுமாகப் பிறக்கின்றனர்.

    அத்திபதி  என்னும் அரசனுக்கும், நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் இராகுலன் ஆவான். இவன் பின்பிறப்பில் அசோக குமாரன் ஆவான்.

    இவர்கள் இருவரும் இனிது வாழ்ந்திருந்தனர். ஒரு முனிவரை இருவரும் சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணிமேகலையில் இந்நிகழ்ச்சி இருவகைகளில் விவரிக்கப்படுகின்றது.

வகை.1.
    பாத்திரம் கொடுத்த காதையில்  மணிமேகலா தெய்வம் ஒரு முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.

    இலக்குமி தன் கணவனான இராகுலனுடன் ஒரு முறை பூஞ்சோலை ஒன்றில் மகிழ்ந்து இருந்தாள். இவர்கள் இருவருக்குள் ஊடல் தோன்றியது. அவ்வூடலில் தோற்ற இராகுலன் இவளை வீழ்ந்து வணங்கினான். அப்போது சாது சக்கரன் என்ற முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் இலக்குமி மயங்கி உடல் நடுக்கமுற்று அவரை வணங்கினாள். இவள் வணங்கியதைக் கண்ட இராகுலன் கோபமுற்று " ஏன் இவரை வணங்கினாய்'' என்று மீளவும் கோபமுற்றான்.

    இவனின் கோபத்தை அடக்கினாள் இலக்குமி. பின் இருவரும் வணங்கி அம்முனிவர் மகிழும் வண்ணம் உண்ண உணவும் பருக நீரும் கொடுத்தனர். இதனை அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வறமே இன்று உனக்குத் தொடர்கிறது.

    இப்பிறவிக் கதையை மணிமேகலா தெய்வம் உரைக்கின்றது.

வகை.2.
    கந்திற்பாவை மணிமேகலையின் முற்பிறவியினை மற்றொரு இடத்தில் உரைக்கின்றது. கந்திற்பாவை வருவது உரைத்த காதை என்ற இந்தப் பகுதியில் விவரிக்கப்படும் நிகழ்ச்சி பின்வருமாறு.

    இலக்குமி, இராகுலன் என்ற இருவரும் காயாங்கரை என்ற ஆற்றின் கரையில் இருந்த பிரம்ம தருமன் என்னும் முனிவனை வணங்கச் சென்றனர். அவரை வணங்கிய பின்னர் நாளை தங்களின் இல்லத்திற்கு அவரை உணவுண்ண அழைத்தனர். அவரும் வருவதாய்  ஒப்புக் கொண்டதால் மகிழ்வுன் இரவைக் கழித்தனர். காலையில் சமையல் தொழிலுக்கு வந்த பணியாளனின் கவனக்குறைவு காரணமாக சோற்றுப் பாத்திரம் உடைந்து அமுது அழிந்தது. இதனால்  கோப்பட்ட இராகுலன் அவனை தோளும், தலையும் சிதையுமாறு வெட்டினான். இதன் காரணமாக அவனும் வினைப்பயன் கருதி அழிய வேண்டியவனாயினான்.

    இவ்விரு கதைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைப் போன்று பல வேற்றுகைளும் இருக்கின்றன. பின்வரும் வினாக்கள் இவ்விரு கதைகளின் மேல் கேட்கப்படுகின்றபோது இக்கதைகளின் உண்மைத்தன்மை வெளிப்படலாம்.

    பிரும்மதருமன், சாதுசக்கரன் என்ற இருவரும் ஒருவரா?, அல்லது வேறு வேறு துறவிகளா? வேறு வேறானவராக இருப்பின் நிகழ்ச்சி ஒன்றா? வேறா? என்ற பல அடிப்படை கேள்விகளை இதிலல் எழுப்ப வேண்டி உள்ளது.

    வேறு வேறு நிகழ்ச்சிகள் என்று கொண்டால் முனிவர்களைச் சந்திக்கின்ற வழக்கமும், அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகின்ற சராசரி மனித வாழ்க்கையை உடையவர்களாக இப்பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன என்று கொள்ள வேண்டும்.

    அடுத்து இலக்குமியின் மறுபிறவி மணிமேகலை. இராகுலனின் மறுபிறவி அசோக குமாரன். அசோக குமாரன்,  இராகுலன் ஆகியோர் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் அரசகுமாரர்கள். ஆனால் இலக்குமி முற்பிறவியில் அரசிமகள். இப்பிறவியில் கணிகையின் மகள். ஏன் அவள் அரசியின் மகளாக பிறப்பெடுத்திருக்கக் கூடாதா. முற்பிறவியில் கொலை செய்த ஆண் பின் பிறவியில் ஆணாக அரசகுமாரான இறக்கம் இல்லாமல் படைக்கப்படுகின்றபோது நன்மை செய்த இலக்குமி மட்டும் ஏன் அடுத்த பிறவியில் இவ்வாறு கீழிறக்கப் பெற்றுப் படைக்கப்பட வேண்டும்.

    அதுபோல தரை, வீரை ஆகியோர் முற்பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, ஒரே அரசனை மணக்க பிற்பிறவியில் அவர்கள் இருவரும் ஒருத்தி கணிகையர் குலம், ஒருத்தி அந்தணர் குலம் என பிறப்பிக்கப்படச் செய்யவேண்டும். மேலும் முற்பிறவியில் குடும்ப மகளிராக இருந்த இவர்கள் இப்பிறவியில் பதியிலாளராக ஏன் மாற்றப்படவேண்டும். இக்கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கும் உண்மை ஒன்றுதான். ஆண் என்றும் தன் வலிமையுடன் இருக்க பெண் என்றும் தன்னிலைக்குக் கீழே சென்று கொண்டிருக்கும் படியாகப் படைக்கப்பெறுவாள் என்பதுதான் அந்நிலையாகும்.

    மணிமேகலை என்ற பாத்திரம் அவ்வப்போது உயர்நிலைகளை அடைவதாகக் காட்டப் பெற்றாலும் அவ்வப்போது அவள் அடைந்த உயரத்தை விட அடைவிக்கப் பெற்ற தாழ்வுகள் அதிக அளவில் உள்ளன.
  



    மணிமேகலை தன் பழம் பிறப்பினை மணிபல்லவத் தீவில் அறிகிறாள். அப்போது  அவளைச் சுமந்து வந்த மணிமேகலா தெய்வம் முன்று மந்திரங்களை அவளுக்குக் கற்பிக்கின்றது.

    "அல்லிஅம்கோதை! கேட்குறும்  அந்நாள்
      இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
      விளைபொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
      அந்தரம் திரியவும் ஆக்கும் இவ்வருந்திறல்
      மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி''
( மந்திரம் கொடுத்த காதை 7882)

    "மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
      இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று
      ஆங்கு அது கொடுத்து '' (மேலது 9091)
என்ற பகுதிகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரங்களைச் சுட்டுவனவாகும். இதன்வழி

1.    இளையவள், வளையணிந்த பெண் என்பது கருதி யாரும் மணிமேகலைக்குத் தத்துவப் பொருளைக் கூறமாட்டார்கள். எனவே வேற்று உருவம் எடுத்து அம்மெய்ப் பொருள்களை அறிவதற்கு  வாய்ப்பாக ஒரு மந்திரத்தை மணிமேகலா தெய்வம் வழங்குகின்றது.  அது  உருமாற்று மந்திரம் ஆகும்.
2.    இன்னொரு மந்திரம் அந்தரத்தில் செல்வதற்கு உரிய மந்திரம் ஆகும்.
3.    மற்றொன்று பசி களையும் மந்திரம் ஆகும்.

இம்முன்று மந்திரங்களில் முதல் மந்திரம் ஆணாதிக்க வயப்பட்டுள்ளது மிக்கத் தெளிவாகத் தெரிகின்றது. அக்காலத்தில் சமயத் தத்துவ அறிவு பெற்றவர்கள் ஆண்கள்தான். அவர்கள் வழியாகத்தான் யாரும் மெய்ப் பொருள் அறிய இயலும். மணிமேகலை பெண் என்பதால் அவள் தத்துவத்தை அறிய இயலாது. எனவே உருவை மாற்றிக் கொண்டுதான் அவள் தத்துவம் கேட்டாக வேண்டும். அவ்வாறே  பின்பகுதியில் வஞ்சி மாநகரில் மாதவன் வடிவினை அவள் எடுத்துக் கொண்டுத் தத்துவம் கேட்கிறாள்.

    பெண் என்பதால் தத்துவம் கேட்க இயலாது என்ற இதே கருத்தினை கண்ணகி படிமமும் வஞ்சியில் எடுத்துரைக்கின்றது.
      
"இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்
  விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க'
            ( வஞ்சி மாநகர்புக்க காதை, 6869)

என்று முன் கூறிய அதே கூற்றினை மீளவும் இக்காதையில் சாத்தனார் எடுத்துரைக்கின்றார்.

    இதன் காரணமாக அவருள் உள்ள ஆண் சார்ந்த மனநிலை உணரக் கூடியதாக உள்ளது. பெண்களே பெண் உருவில் செல்லாதே என்று கூறக்கூடிய நிலையில் இவ்வாறு படைப்பது என்பது ஆண் படைப்பு மனத்தாலேயே இயலும்.

    உண்மையைக் கேட்டுணரப் போகின்றபோது உண்மையை மறைத்துப் பொய்வேடம் கொள்ளும் முறைமையால் பயன் ஏதும் விளையுமா என்று என்ணிப் பார்த்தால் இதன் வேறுபட்டதன்மை புரிபடும்.

    மணிமேகலை இம்மந்திரங்களையும்,  அமுதசுரபிப் பாத்திரத்தையும் பெற்றுக் கொண்டு பூம்புகார் வருகிறாள். ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றபின் அவள் எளியோர்க்கும், ஏழைகளுக்கும் உணவிடுகிறாள். அவ்வாறு உணவிடும் இவளை உதய குமாரன் பின்தொடர்ந்தே வருகிறான். அவளிம் " நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? '' என்று வினவுகின்றான்.

    இதற்கு மணிமேகலை அளிக்கும் பதில் கவனிக்கத்தக்கது.

    " பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
       இறத்தலும் உடையது  இடும்பைக் கொள்கலம்
       மக்கள் யாக்கை இது என உணர்ந்து
       மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
       மண்டு அமர் முருக்கும் களிறு அணையார்க்கு
       பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ?''
             ( உதய குமாரன் அம்பலம் புக்க காதை 136142)
என்ற பதிலில் பெண்டிர் ஆண்களுக்கு அறிவு கூறலாகாது என்று மணிமேகலை உரைப்பதாக படைக்கப் பெற்றுள்ளது. பெண்கள் அறிவுரை  கூறக்கூடாது. அறமாவது செய்யலாமா என்றால் அதுவும் முடியாததாகி விடுகின்றது.

    இது கழிந்தபின்னர் தன் உண்மை உருவத்துடன் உலவினால் உதயகுமரனால் தொல்லைகள் ஏற்படும் எனக்கருதி யானைப்பசி நோய் பெற்ற பெண்ணான காயசண்டிகையின் உருவத்தினை மணிமேகலை மந்திரத்தின் வழி பெறுகிறாள். காய சண்டிகை, வயந்தமாலை போன்றோர் விஞ்சையர்களால் கைக் கொள்ளப் பெற்றவர்கள். பின்னாளில் அவர்களால் தன் வாழ்வை இழந்தவர்கள் என்ற பகுதி ஒரு தனிக்கட்டுரையாக விரியத்தக்கது. காயசண்டிகை கணவனுடன் இணையாமலே இறப்பினைத் தழுவுகிறாள். அவளின் உருவத்தில் மணிமேகலை மறைந்து நின்று அறம் செய்கிறாள்.

    அறம் செய்யவும் பெண் வரக்கூடாது. அப்படிச் செய்ய வருவதானால் வேற்றுருவில்தான் செய்யவேண்டும் என்பது போன்று இக்காப்பியத்தில் மணிமேகலைப் பாத்திரப்படைப்பு அமைக்கப் பெற்றுள்ளது.

    மேலும் அரசன் மணிமேகலையின் அறத்திறத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அழைத்து நேரடியாக விசாரிக்கின்றான். அப்போதும் அவள் தன் உண்மை நிலையைக் கூறாது காயசண்டிகையின் வரலாற்றையே தன் வரலாறாக உரைக்கின்றாள். சமய உண்மைகளை நிலை நாட்டவேண்டிய பெண்ணாக வளரவேண்டிய மணிமேகலைப்  பாத்திரத்தில் இவ்வளவு முரண்கள் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டாகவேண்டியுள்ளது.

    இதன்பின் உதய குமரனைக் காஞ்சனன் வாளால்  வெட்டுகின்றான். வெட்டுப் பட்டவனைப் பற்றியோ, வெட்டியவனைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. ஆனால்  வெட்டுவதற்குக் காரணமாக மணிமேகலை இனம் காணப்பட்டு அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.

    சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைக்குக் கிடைத்த பரிசு அவள் சிறைவீடு புகுதலே ஆகும். இந்நிலையில் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய உயர் மனிதச் சிந்தனை உடனடியாக தாழ்வினைச் சந்திக்கின்றது. இவ்வாறு ஏறுமுகமும் இறங்குமுகமும் அடுத்தடுத்து மணிமேகலைப் பாத்திரத்திற்கு அமைக்கப் பெற்றுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.

    இக்கருத்தை அரசனின் செவியல் படும்படி தெரிவிக்க சில முனிவர்கள் வருகின்றனர்.  இவ்விடைவெளியில்  அசோக குமாரன் பிணத்துடன் மணிமேகலை மறைத்து வைக்கப்படுகிறாள். அரசனிடம் வந்த முனிவர் பல கருத்துக்களைக் கூறிக் காம வயப்படுபவனை அரசன் தண்டிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அவன் தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறுகின்றனர்.

    இதுபோழ்து இரு கதைகளை ளடுத்துரைக்கின்றனர். மருதி, விசாகை என்ற இரு பெண்களின் கதை இங்கு எடுத்துக்காட்டப் பெறுகின்றது. மருதி பிற ஆடவனால் விரும்பப்படுகிறாள். அவ்வளவில் பிறர் நெஞ்சு புகுந்ததே கற்பிற்குக் கேடு என்று அவள் கருதுகிறாள். இதன் காரணமாக பூதத்திடம் முறையிட ஏழு நாளில் அந்தக் காமுகன் அழிகிறான். அடுத்து  விசாகை என்பவளின் கதை கூறுப்படுகிறது. இவளுக்கும் இவளின் முறைப்படி கணவனாகவேண்டிய ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரார் பேசிக் கொள்ள இவளும் அவனும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் காமத்தைத் தவிர்த்து அறமுணர்ந்து வாழ்ந்த நிலையை இக்கதை விளக்குகின்றது.

    இவ்விரு கதைகளிலும் பெண்கள் குற்றம் செய்யவில்லை என்றபோதும் அதிகம் துயரத்திற்கு ஆட்படுவது பெண்கள்தான் என்பது தெளிவு.

    இவ்வாறு ஏற்றமும் இறக்கமும் கொண்ட பெண்கள் பாத்திரப்படைப்பினைப் பெற்றதாக மணிமேகலை விளங்குகின்றது.
  
    இதன் காரணமாக காமத்தின் விளைவினை எடுத்துரைக்க முனிவர் முனைந்தாலும் அரசன் மணிமேகலையைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கின்றான்.

    இதன்பின் மணிமேகலை சிறைக் கோட்டம் சார்கிறாள். அரசமாதேவியின் யோசனையின்படி அரசமாதேவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறாள். அங்கு அவளுக்கு பித்தேற்றும் மருந்தினைப் புகட்டுகிறாள். மணிமேகலை அதனின்றும் தப்பிக்கிறாள். அடுத்து காமுகன் ஒருவனைக் கொண்டு மணிமேகலை அடையச் செய்வதான தவறான நிலையை எடுக்கிறாள். அப்போது மணிமேகலை ஆண் வடிவம் கொள்கிறாள். இதன் காரணமாகக் காமுகன் பயந்து ஓட்டமெடுக்கிறான்.

    பின்பு புழுக்கம் மிக்க அறையில் உண்ண உணவும் நீரும் இன்றி அடைக்கிறாள். இதிலிருந்தும் மணிமேகலை மந்திரம் சொல்லித் தப்பிவிடுகிறாள். இதன்பின் அவ்வரசி நல்வழிப்படுகிறாள். மணிமேகலையை விடுவிக்கிறாள்.


    இங்கும் மணிமேகலையைத் துன்புறுத்தும் சூழலுக்கு உரியவராகப் பெண் படைக்கப் பெற்றுள்ளாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற அடிக்கருத்து இக்காப்பியத்துள் புதைந்து பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டுள்ளது.

    இதன்பின் மணிமேகலை முன்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறந்து தற்போது புண்ணியராசனாகப் பிறந்துள்ள அரசனைக் கண்டு அவனுடன் மணிபல்லவம் அடைந்து அவனையும் முற்பிறவி பற்றி அறியச் சய்து வஞ்சி காஞ்சி போன்ற நகரங்களுக்குச் சென்று பௌத்த நெறிபரப்பி பவத்திறம் அறுக என பாவை நோற்ற நிலையில் மணிமேகலைக் காப்பியம் நிறைவு பெறுகின்றது.

    அடிக்கடி திருப்புமுனைகள் இக்காப்பியத்தில் ஏற்பட்டபோதும் பெண்களை உயரத்தில் ஏற்றியும் பின் பள்ளத்தில் தள்ளியும் வீழச் செய்யும் முயற்சியே அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை  பெண்ணிய வாசிப்பின்போது உணரமுடிகின்றது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக